அவகாசம் கேட்கும் எஸ்.பி…. சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறதா நெல்லை கொலை வழக்கு?

தமிழகம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க, நெல்லை எஸ்பி சிலம்பரசன் தலைமையில் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.’

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை என பல்வேறு பகுதிகளில்  தனிப்படையினர்  இரவு பகலாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் இந்த வழக்கில்   என்ன நிலவரம், என்ன முன்னேற்றம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகளை கேட்டு வருகிறார்.

டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் என மூன்று முக்கிய அதிகாரிகளும்  இந்த வழக்கு பற்றி தினந்தோறும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது வரை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை பற்றிய விசாரணைக்காக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு டிஎஸ்பியின் ஒருங்கிணைப்பில் ஒவ்வொரு தனிப்படையிலும்  ஒரு இன்ஸ்பெக்டர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஜெயக்குமாரின் ரத்த உறவுகளிடம் விசாரணை, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை, ரவுடிகள், கூலிப்படையினர் தொடர்பான விசாரணை என  ஒவ்வொரு தனிப்படையும் வெவ்வேறு  கோணங்களில் இந்த விவகாரத்தை விசாரிக்கின்றன.

ஜெயக்குமாரின் மரண வாக்குமூல கடிதத்தின் அடிப்படையில் அரசியல் பிரமுகர்கள் முதல் அவரோடு கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்கள் வரை என பலரையும் விசாரித்தும்… இந்த வழக்கில் இன்னும் ஒரு தெளிவான பிக்சர் போலீஸாருக்கு கிடைக்கவில்லை.

தேசிய  காங்கிரஸ் தலைமையும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலையின் பின்னணி குறித்து இந்த தேர்தல் பிசியிலும் கூட அவ்வப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்  செல்வபெருந்தகையிடம் கேட்டு வருகிறார்கள்.

கூட்டணிக் கட்சியின் மாவட்டத் தலைவர் கொலை வழக்கு என்பதால்,  முதல்வரும் இந்த வழக்கை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.

ஏழு  நாட்களாகியும்  விசாரணையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில் போலீஸ் உயரதிகாரிகள் நெல்லை  மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனிடம், ‘சி. எம். இந்த வழக்கு பற்றி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். உங்கள் விசாரணையில் முன்னேற்றம் இல்லையென்றால் இந்த கேசை சிபிசிஐடிக்கு மாத்திடலாமா?’ என்று  ஆலோசித்திருக்கிறார்கள்.

அதற்கு எஸ்பி… ‘தனிப்படைகள் அமைத்து எல்லா கோணத்திலும் தீவிரமா விசாரணை செஞ்சிட்டிருக்கோம். வர்ற சண்டே வரைக்கும் டைம் கொடுங்க. குற்றவாளிகளை நெருங்கிட்டோம்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

ஒருவேளை  அதற்குள் நெல்லை மாவட்ட போலீஸாரால் இந்த வழக்கில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை அடையமுடியவில்லை எனில்… வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட  சாத்தியங்கள் இருக்கிறது என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில்.

வேந்தன்

கொஞ்சம் டிவி, கொஞ்சம் மொபைல்: அப்டேட் குமாரு

இமாலய இலக்கு… டஃப் கொடுத்த குஜராத்…. சமாளிக்குமா சிஎஸ்கே?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *