கோவையில் தனது எம்.எல்.ஏ அலுவலகத்திற்குள் காலி மது பாட்டில்கள் இருந்ததை பார்த்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார்.
கோவையில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் வானதி சீனிவாசன் இன்று (மே 8) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் முத்திரைத்தாள் வரியை மட்டுமல்ல, சொத்துவரி, குடிநீர் வரி, மின்சார வரி என அனைத்தையும் உயர்த்தி உள்ளனர். மதுபானத்தில் கூட விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்றப்படாமல் உள்ளது.
தமிழக அரசு மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு கவனம் கொடுக்கவில்லை. இதை தவிர்த்து தமிழக முதல்வர் சில சமயங்களில் காலை நடைபயணம் செய்கிறார். மக்களிடம் சினிமா பார்த்தீர்களா என்று கேட்கிறார். அவர் மகனின் வருங்காலத்தை உறுதி செய்கிறார்கள்.
தெரு நாய்களை கட்டுப்படுவது தொடர்பாக நான் சட்டப்பேரவையில் பேசினேன். அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாநகராட்சியில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினால், தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும், அதற்கு அரசு தரும் பணம் போதவில்லை என்று கூறுகிறார்கள்.
கோவையில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும். நாங்கள் தேர்தலுக்கு முன்பு ஒரு வார்த்தை, தேர்தலுக்கு பின்பு ஒரு வார்த்தை என்று சொல்லவில்லை. எப்போதும் ஒரே வார்த்தை தான், பாஜக நிச்சயமாக வெற்றி பெறும்.
ரேவண்ணா விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள ஒருபோதும் பாஜக தடையாக இருக்காது. பெண்களுக்கு எதிராக குற்றம் புரிபவர் யாராக இருந்தாலும் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் சட்டமன்ற அலுவலக வளாகத்திக்குள் பாட்டில்கள் எல்லாம் கிடக்கிறது பாருங்கள் என்று கைக்காட்ட,
அதை பார்த்த வானதி சீனிவாசன் அதிர்ச்சியுடன், “என்னங்க சொல்றீங்க.. எங்க ஆபிசுக்குள்ளயேவா.. என்ன தம்பி இது.. பாருங்க…
எம்எல்ஏ ஆபிஸை திறக்காமல் விட்டால்… இப்படி எல்லாம் சமூக விரோதிகள் உள்ள வந்திடுறாங்க…
இன்னும் கொஞ்சம் நாள் போனால், ஆபிஸில் கஞ்சா விற்பதாக சொன்னாலும் சொல்வாங்க போல… வேதனையாக இருக்கிறது” என்று கூறினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்ட்ராங் ரூமில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் : தேர்தல் ஆணையம்!
கெஜ்ரிவாலுக்கு பெயில் கிடைக்குமா? இடைக்கால உத்தரவு எப்போது?