சபாநாயகர் கேள்வி… வானதி ரியாக்‌ஷன்… சட்டப்பேரவையில் சிரிப்பலை!

அரசியல்

தொகுதி மறுவரையறை தீர்மானத்தை ஆதரிக்கிறீங்களா? என்ற சபாநாயகர் அப்பாவுவின் கேள்விக்கு வானதி சீனிவாசன் கொடுத்த பதிலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றுக்கு எதிராக சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 14) முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானங்கள் கொண்டு வந்தார். இந்த தீர்மானங்கள் மீது பாஜக சார்பில் பேசிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., “தென் மாநிலங்கள் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதாலும் ஒரு சிறப்பான இடத்தை அடைந்திருக்கின்றன. வருங்காலத்தில் தொகுதிகள் எண்ணிக்கைகள் குறைக்கப்படும்போது, நமக்கான குரல்கள் ஒலிக்கப்படுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுமோ என்கிற கவலையை அக்கறையை புரிந்துகொள்கிறோம்.

இதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதனை தமிழக பாஜக செய்யும்” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு,  ‘ஆதரிக்கிறீங்க… என்று சொல்ல அதற்கு வானதி சீனிவாசன், ‘அந்த வார்த்தை வேண்டும் ஐயாவுக்கு’ என்று என்று பதிலளித்தார்.

இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் குறித்து பேசிய வானதி சீனிவாசன், “1952ல் இருந்து பொதுத் தேர்தல்கள், சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து வருகின்றன. இந்த தேர்தல்களில் சிறிது சிறிது சீர்த்திருத்தங்கள், காலத்துக்கு ஏற்ற மாற்றம் ஆகியவை இருந்தன. இதையெல்லாம் கடந்துதான் வந்திருக்கிறோம்.

மக்கள் தொகை, கால மாற்றம், தொழில் நுட்ப வசதி இவற்றுக்கு ஏற்ப தேர்தல் நடைமுறைகள், செலவினங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அவசியம் ஏன் வருகிறது.

இங்கு பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்தை தெரிவித்தார்கள். அதில் ஒரு சிலர் கருத்துகளில் உண்மை இருக்கிறது.

ஆனால் ஒரு சிலரது கருத்துகளில் அவர்களே உருவாக்கி கொண்ட கற்பனை இருக்கிறது. பாசிசம், அதிபர் என்றெல்லாம் சொல்கிறார்கள்” என்று பேசிக்கொண்டிருந்த போது, குறுக்கிட்ட சபாநாயகர், இது அவரவர் கருத்து” என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், “ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
அப்படி இருக்கும் போது, உள்ளாட்சித் தேர்தலையும் ஒரே நாடு ஒரே தேர்தலில் சேர்த்துவிடுவார்கள் என்று தீர்மானத்தில் இருக்கிறது. ஆனால் அந்த குழு அறிவிப்பில் அதுபோன்ற ஒரு வார்த்தையே இல்லை.

முழுவதுமாக நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தால் எப்படி இருக்கும், பெரும்பான்மை போய்விட்டால் எப்படி இருக்கும் என்று கேள்விகள் எழுவது சரிதான். இதெல்லாம் சவால்கள். வரக் கூடிய காலத்திலும் இந்த கேள்விகள் வரும்.

இதை நாம் சீர்த்திருத்தமாக மட்டுமே பார்க்க வேண்டும்.  பயம் தேவையில்லை. இந்த தீர்மானம் அவசியமற்றது” என எதிர்ப்புத் தெரிவித்தார்.

“பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எனக்கு ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார். முன்னாள் முதல்வர் கலைஞர் நெஞ்சுக்கு நீதி புத்தகம் பாகம் 2ல், 273ஆவது பக்கத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலை வலியுறுத்தி உள்ளார்” என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, ‘பயத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்’ என வானதி சீனிவாசன் கூறியதை அப்பாவு அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா

”அவங்கள காதலிக்கிறேன்” கமெண்ட் அடித்த இந்தியர்… கம்மின்ஸின் ‘ரிப்ளை’ இதுதான்!

விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *