சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டாரா? நீதிமன்றத்தில் நடந்த விவாதம்!

தமிழகம்

யு ட்யூபர் சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட வழக்குகளில்  கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கரை போலீசார் சிறையில் தாக்கியதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷணன் புகார்  தெரிவித்திருந்தார்.

இந்த அடிப்படையில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா நீதி விசாரணை கேட்டும், சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மே 8ஆம் தேதி நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சவுக்கு சங்கர் தாயார் சார்பில் கமலா தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்யன், காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆகியோர் ஆஜரானார்கள்.

கூடுதல் குற்றவியல்  வழக்கறிஞர் ராஜ் திலக் வாதாடுகையில், “சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்து போலீசார் அழைத்து வந்த போது தாராபுரம் பகுதியில் விபத்து ஏற்பட்டது.

அப்போது அந்த வாகனத்தில் வந்த காவல்துறையினரும் காயம் அடைந்தனர். சங்கருக்கு வலது கை, கால் பாதம், உதடு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உள்ள மருத்துவரும் அவரை பரிசோதித்து சான்றிதழ் கொடுத்துள்ளார்.
இந்த அறிக்கையில் சவுக்கு சங்கர் கையெழுத்து, கைரேகை இட்டுள்ளார்.

இதனிடையே கோவை சிறையில்,   தான் தாக்கப்பட்டதாக கோவை ஜே.எம்.4 நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.  இதுதொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் வழக்கறிஞர் சண்முகவேலு உட்பட மூன்று பேர் சிறையில் ஆய்வு செய்தனர். ஒரு எலும்பு சிகிச்சை நிபுணர் குழுவும் அவரை பரிசோதித்து விசாரணை செய்தது. இந்த அறிக்கை கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

அப்போது,  மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு அறிக்கையை  சென்னை உயர் நீதிமன்றத்திலும்  தாக்கல் செய்ய நீதிபதிகள்  உத்தரவிட்டு வழக்கை மறுநாளுக்கு ஒத்தி வைத்தனர்.

மீண்டும் இவ்வழக்கு நேற்று (மே 9) விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, விசாரணை குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில்,  “சங்கர் தனது வலது முழங்கையில் வலி இருப்பதாக கூறியதாகவும், எனவே எக்ஸ்ரே எடுத்து பிளாஸ்டிக்  சர்ஜரி நிபுணரிடம் கருத்து பெறுவதும் அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து வாதிட்ட கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், “சங்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, தனக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர் மீது சிறையில் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. கோவை நீதிமன்ற உத்தரவுப்படி, கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

மேலும்,  “கோவை மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்த போது, சங்கருக்கு ஏற்பட்ட காயம் தாக்குதல் காரணமாக ஏற்பட்டதா அல்லது மே 4 அன்று தேனியில் இருந்து அழைத்து வந்த போது ஏற்பட்டதா என தெளிவாக தெரியவில்லை என்பதால், சங்கருடைய குற்றச்சாட்டின் தகுதிக்குள் செல்லாமல் தவிர்த்தார்” என்றும் குறிப்பிட்டார் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்.

சவுக்கு சங்கர் தரப்பில், அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், ”கோவை நீதிமன்றம் சங்கருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதன்படி, கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாய் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்”  என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

”சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியாவை பாதுகாப்போம்: கெஜ்ரிவால் ஆவேசம்!

திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்: ஆரவாரம் செய்த தொண்டர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *