ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: தமிழக அரசு சட்டத்தை எதிர்த்து வழக்கு!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆல் இந்தியா கேமிங் ஃபெடரேஷன் என்ற அமைப்பு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கக்கூடாது என்று நிபந்தனை உள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடுதான் விளையாட்டுகள் வழங்கப்படுகிறது. அதேசமயம் அடிமை ஆவதை தடுப்பதற்கான சோதனைகளும் உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு  ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறமையான விளையாட்டுகளை சூதாட்டம் என கூறி  தடை செய்ததை  உயர் நீதிமன்றம்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது.

ஆனால் தற்போது மீண்டும்  ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசரச் சட்டத்தை வெளியிட்டுள்ளது.

1957 ஆம் ஆண்டின் மேற்கு வங்க சூதாட்டம் மற்றும் பரிசுப் போட்டிகள் சட்டம் ‘கேமிங் அல்லது சூதாட்டம்’ என்ற வரையறையிலிருந்து போக்கரை விலக்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டு சிக்கிம் அரசு ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை விதிகள் போக்கர் மற்றும் ரம்மியை உரிமத்தின் கீழ் விளையாட அனுமதிக்கின்றன.  நாகலாந்து அரசு, போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டுகளாக வகைப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டுகளாகக் கருதுகின்றன. அதை பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் எல்லைக்கு வெளியே வைத்துள்ளன.

எனவே மற்ற மாநிலங்களின் சட்டங்கள் மற்றும் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் கொண்டு வரப்பட்டுள்ள ஆன்லைன் தடை சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று(நவம்பர் 10) பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்ரவரத்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கலை.ரா

10% இடஒதுக்கீடு: இறுதி தீர்ப்பை காங்கிரஸ் ஏற்கும்!

ஸ்டாலின் தவறுகளை அமித்ஷா, மோடியிடம் சொல்லிவிடும் ஆளுநர்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts