பெண்களுக்கு ஜிம், மேயர், வார்டு உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி உயர்வு உள்ளிட்ட அம்சங்கள் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 21) மேயர் பிரியா தாக்கல் செய்து உரையாற்றினார்.
மொத்தம் 82 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அவை,
கல்வி
2024-2025ஆம் கல்வியாண்டில் மொத்தம் 419 பள்ளிகளில் LKG வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணாக்கர்களுக்கு ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் பள்ளிச் சீருடைகள் வழங்கப்படும்.
பள்ளி மாணாக்கர்களின் பாதுகாப்பு நலன் கருதி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக 255 பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் ரூ.7.64 மதிப்பீட்டில் பொருத்தப்படும்.
208 தொடக்க மற்றும் 130 எல்கேஜி வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 64,022 மாணாக்கர்களுக்கு ரூ.3.59 கோடி மதிப்பீட்டில் முதல் முறையாக 1 செட் ஷூ மற்றும் 2 செட் சாக்ஸ் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையம் ரூ.3.00 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
சென்னைப் பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்காக 419 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.1.32 கோடி வழங்கப்படும்.
அனைத்து சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாண மாணவியர்களுக்கும் அடையாள அட்டை (ID Card) 61 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் இரண்டு சமுதாயக் கல்லூரிகளில் ரூ.50.00 இலட்சம் செலவில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.
சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பில் பயிலும் 24,700 மாணாக்கர்களை, சென்னையைச் சுற்றியுள்ள இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதற்காக ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
சென்னைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் வளர்இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35.00 இலட்சம் செலவில் 10 ஆலோசகர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
பொதுசுகாதாரம்
கத்திவாக்கம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மேம்பட்ட உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க, கத்திவாக்கம் நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையம் (UPHC) 10 படுக்கைகளுடன் மேம்படுத்தப்படும்.
மேலும், சுவாசம், தோல், காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு வாரம் ஒருமுறை, சிறப்பு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். இதற்கு ரூ.3.00 கோடி செலவீனம் மேற்கொள்ளப்படும்.
முதற்கட்டமாக 113 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.5.09 கோடி மதிப்பீட்டில் ஜெனரேட்டர் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
140 நகர்ப்புர சுகாதாரம் மற்றும் நல வாழ்வு மையங்களில், மின் தடை ஏற்படும் போது, தடையின்றி மருத்துவ சேவைகள் வழங்கும் வகையிலும், சிகிச்சை பெறுபவர்கள் / பணியாளர்களின் பாதுகாப்பு கருதியும், மின் இன்வெர்ட்டர்கள் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து அமைக்கப்படும்.
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கால்நடைகளை பிடிக்கும் பணிக்காக 1,2,3,4,7, 11,12,14 மற்றும் 15 ஆகிய 9 மண்டலங்களுக்கு, தலா 5 நபர் வீதம் 45 தற்காலிக பணியாளர்கள், சுய உதவி குழுக்கள் மூலம் நியமிக்கப்படுவார்கள். இதற்காக வருடத்திற்கு ரூ.1.16 கோடி தொடர் செலவினமாக இருக்கும்.
சென்னை மாநகர எல்லைக்குள் சுற்றித் திரியும் தெரு நாய்கள், பொது மக்களை அச்சுறுத்துவது மற்றும் கடிப்பதால் ரேபிஸ் நோய் தாக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது, எனவே, தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, புதியதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதன் மூலம் நாய் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு பொது மக்களின் நலன் காக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.70.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை மாநகராட்சியில் வளர்க்கப்படும் மாடுகளை முறைப்படுத்த போதிய இடவசதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுள்ள மாட்டு உரிமையாளர்களின் மாட்டுத் தொழுவங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
கால்வாய்களில் உருவாகும் கொசுப்புழுகளை அழிப்பதற்கு கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணிக்கு ரூ.80,000/- வீதம் 15 மண்டலங்களுக்கு ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் Vehicle Mounted Power Sprayer- வுடன் கூடிய துணை கருவிகள் (Accessories) கொள்முதல் செய்து வழங்கப்படும்.
அடையாறு நகர்ப்புற சமூக சுகாதார மையம் 70 படுக்கைகளுடன் மேம்படுத்த 7 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம் கட்டப்படும்.
சைதாப்பேட்டை, அவசர சிகிச்சை மையம் 70 படுக்கைகளுடன் மேம்படுத்த 7 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம் கட்டப்படும்.
சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் மிக முக்கிய பணிகளை மேற்கொள்ளும் தூய்மை, சுகாதாரம் மற்றும் சாலை பணியாளர்களின் உடல் நலனை பேணி காக்கும் வகையில் அனைத்து நான்காம் நிலை களப்பணியாளர்களுக்கும் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனைகள் மூலம் முழு உடல் பரிசோதனை, பெருநகர சென்னை மாநகராட்சியின் செலவில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அடிப்படை தொழிலாளர்களின் நலன் காக்கப்படும். இதற்காக ரூ.8.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மழைநீர் வடிகால் பணிகள்
2024-25 ஆம் ஆண்டில் சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகளை ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
2024-25 ஆம் ஆண்டில் மண்டலம் 2, மாத்தூர் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள குளத்தினை பரிச்சார்த்த முறையில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் Sponge park-ஆக வடிவமைக்கப்படும். இதனால் மழை காலங்களில் மழைநீர் சேகரிக்கும் குளமாகவும் சுற்றியுள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரவும், இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவதும் தவிர்க்கப்படும். மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களில் Sponge park அமைக்க ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து Sponge park அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டடம்
சென்னை மாநகராட்சியில் உள்ள மயான பூமிகளை நவீன முறையில் மேம்படுத்துவதற்கு 10 கோடி ரூபாய் செலவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
1 முதல் 15 மண்டல அலுவலகம் மற்றும் மூன்று வட்டார துணை ஆணையர் அலுவலகங்களில், “தமிழ் வாழ்க” “தமிழ் வளர்க” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பெயர் பலகை மொத்தம் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் அந்தந்த மண்டல அலுவலகங்கள் மூலம் அமைக்கப்படும்.
பழுது ஏற்பட்டிருக்கும், 201 சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கட்டடங்களின் மேற்தளங்களை முன்னுரிமையின் அடிப்படையில் Epoxy Water Proofing என்ற தொழில்நுட்பம் மூலம் மறுசீரமைப்பு பணிகள் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
2024-2025-ஆம் நிதியாண்டில் மண்டலம்-8 வார்டு-106 சென்னை, சூளைமேடு, இந்திரா காந்தி 2-வது தெருவில் விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்படும்.
பூங்கா
மண்டலம் 2 ல், கோட்டம் 19-க்குட்பட்ட மாத்தூர் MMDA, 2வது பிரதான சாலையில் ஒரு Mini Stadium அமைக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களில் உள்ள 19 விளையாட்டுத்திடல்கள் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
2024-2025-ஆம் நிதியாண்டில், பக்கிங்காம் கால்வாய் (Central Buckingham Canal) FL4 மாநகராட்சி பகுதியில் 6 இடங்களில் சாலையோர பூங்காக்களை அழகுபடுத்தும் பணிகள் ரூ.4.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான பிரத்தியேக உடற்பயிற்சி கூடம் ஏதும் இல்லை என்ற குறையை போக்க ஒரு வார்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் பெண்களுக்கான “EmpowHER உடற்பயிற்சி கூடம்” 200 வார்டுகளிலும் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
வருவாய்
சென்னை மாநகராட்சி வருவாய் துறையில் வழங்கப்படும் மதிப்பீட்டு ஆணைகளான புதிய மற்றும் கூடுதல் சொத்துவரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம் / திருத்தம், புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள் QR Code தொழில்நுட்பத்தில் வழங்கப்படும், இதன் வாயிலாக ஆணைகளின் உண்மைத் தன்மையை கண்டறியலாம்.
சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களுக்கு வேண்டிய சொத்துவரி மதிப்பீடுகள், பெயர் மாற்ற ஆணைகள், தொழில் உரிமங்கள், போன்ற ஆணைகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் (NSMT, TURIF மற்றும் SFC etc.,) 4750 எண்ணிக்கையிலான சாலைகள் மற்றும் நடைபாதைகள் மேம்படுத்தும் பணி ரூ.404 கோடி மேற்கொள்ளப்படும்.
2024 2025 ஆம் நிதியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைகள் தொடங்கும் கீழ்கண்டுள்ள 5 பிரதான சாலைகளில் நுழைவு வாயில்கள் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். 1) ECR சாலை, அக்கரை, 2) OMR சாலை, செம்மஞ்சேரி, 3) GST சாலை, மீனம்பாக்கம், 4) Mount Poonamallee சாலை, S.R.M.C மருத்துவமனை, 5) GNT ரோடு, மாரியம்மாள் நகர், புழல்.
மண்டலம் – 5 தங்கசாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில், மண்டலம்-9ல் பீட்டர்ஸ் சாலை, கான்ரான்ஸ்மித் சாலை மற்றும் வெஸ்ட் காட் சாலையில் உள்ள மேம்பாலங்களின் கீழ்பகுதியினை ரூ.2.85 கோடி செலவில் அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
நிதி உயர்வு
2024 2025 ஆம் நிதியாண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.2.00 கோடியிலிருந்து ரூ.3.00 கோடியாகவும் உயர்த்தப்படும்.
சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40.00 இலட்சத்திலிருந்து ரூ.45.00 இலட்சமாக உயர்த்தப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட, மண்டலம்-1 முதல் 15 வரை உள்ள 200 வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்தவும், காகிதமில்லா நடைமுறையினை கொண்டு வருவதற்கும், அவசியம் கருதியும், ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் 200 எண்ணிக்கையிலான TAB கொள்முதல் செய்து மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் மேயர் பிரியா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இயக்குநர் ஜேசன் சஞ்சயின் ‘ஹீரோ’ இவர்தான்?
மம்தா பானர்ஜி கட்சி எடப்பாடிக்கு ஆதரவா?