தருமபுரி அருகே யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் விலங்குகள் தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்ட அள்ளி பகுதியில் விளை நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கடந்த மார்ச் 6 இரவு மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இந்நிலையில் தருமபுரியில் மற்றொரு யானை இன்று (மார்ச் 18) மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரகம் பிக்கிலி கிராம பகுதியில் ஆண் யானை ஒன்று புகுந்து விளை நிலங்களில் நடமாடி வந்தது. இதனால் பயிர்கள் சேதமடைவதாகவும், யானையை பிடிக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
நேற்று பாப்பாரப்பட்டி, காரிமங்கலம் வழியாக கம்பைநல்லூர் பகுதிக்கு யானை சென்றதை தெரிந்துகொண்ட வனத்துறையினர், அது செல்லும் வழியில் பின் தொடர்ந்து சென்றனர்.
இந்தசூழலில் இன்று காலை கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி அருகே வி.பள்ளிப்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் ஏற முயன்றபோது, அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்பாதையில் யானை மோதியது.
அப்போது, யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பார்ப்பவர்களின் மனதை பதறவைக்கிறது.
ஏற்கனவே 3 யானை, தற்போது ஒரு யானை என இரண்டு வாரத்திற்குள் 4 யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
இன்ஸ்டா & ஃபேஸ்புக் ப்ளூ டிக்: பலன்கள் என்ன?
வி.ஹெச்.பி மாவட்ட செயலாளர் மீது குண்டர் சட்டம்!