மணல் விற்பனையில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை செப்டம்பர் மாதம் ரெய்டு நடத்தியது. இது தொடர்பாக நீர் வளத்துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டது. அதன் பிறகு நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் முத்தையாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், கரூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தது அமலாக்கத் துறை.
கலெக்டர்கள்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் மணல் குவாரிகள் நடத்துவதற்கான அதிகாரபூர்வ அனுமதியை வழங்கவேண்டும். ஒரு மணல் குவாரி எத்தனை ஹெக்டேரில் இருக்க வேண்டும், எத்தனை லோடுகள் மணல் அள்ள வேண்டும், எத்தனை மாதங்கள் அல்லது வருடம் அள்ள வேண்டும் என்று கலெக்டர் ஆணையிட்டு கையெழுத்திடுவார். மணல் குவாரிகள் மீது புகார் வந்தால் அவற்றை மூடுவதற்கும் கலெக்டர்களுக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு கலெக்டர்கள்தான் மணல் குவாரிகளின் ப்ரொசிடீங் அதாரிட்டி என்பதால் கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசும், அரியலூர், கரூர், வேலூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்ட ஆட்சியர்களும் இணைந்து தாக்கல் செய்த 5 ரிட் மனுக்களை நவம்பர் 27 ஆம் தேதி திங்கள் கிழமை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
நீதிபதிகள் சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோரது அமர்வில் விசாரணை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரானார்.
மாநில அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராகினர்.
தவே முன் வைத்த வாதத்தில், “மைன்ஸ் மினரல்ஸ் டெவலப்மென்ட் அண்ட் ரெகுலேஷன் சட்டத்தில் ஒர் அம்சம் உள்ளது. அதாவது மத்திய அரசின் எந்த விசாரணை முகமையும் இந்தத் துறையில் விசாரணை நடத்த எந்த அதிகாரமும் இல்லை. அது மட்டுமல்ல, எம்.எம்.டி.ஆர். ஆக்ட்டின் கீழ் வரும் குற்றங்கள் அமலாக்கத்துறையின் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தில் பட்டியலிடப்படவில்லை.
மேலும் ED இன் அதிகாரங்கள் கட்டுப்பாடற்றவை என்பது தவறு. PMLA இன் கீழ் சம்மன் அனுப்பும் அதிகாரம் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு மட்டுமே. தற்போதைய வழக்கில், திட்டமிடப்பட்ட குற்றங்கள் எதுவும் இல்லை. எனவே ED அதன் அதிகாரங்களுக்கு புறம்பாக செயல்பட்டிருக்கிறது. இதில் நீதித்துறை தலையீடு தேவை” என்று தவே வாதாடினார்.
மேலும் அவர், “அமலாக்கத்துறைக்கு அதிகாரிகளின் உதவி தேவைப்பட்டால், அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருக்க வேண்டுமே தவிர சட்ட ரீதியாக சம்மன் அனுப்ப முடியாது” என்றும் தவே தனது வாதங்களை எடுத்து வைத்தார்.
மறுபுறம், ED க்காக ஆஜரானார் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன். E.D. சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷும் ஆஜரானார்.
ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதாடியபோது, “இந்த வழக்கில் மனுதாரர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இல்லை. மணல் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணையை முடக்கும் நோக்கத்திலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை விசாரணைக்கே அனுமதிக்க கூடாது.
அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவதே எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்பதற்காகத்தான்.
தமிழகத்தில் சட்டவிரோத மணல் விற்பனை பெருமளவில் நடப்பதாக எங்களுக்கு தெரிகிறது. ஐபிசி பிரிவு 417,418,419,420,471 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இது திட்டமிடப்பட்ட குற்றங்கள்தான். எனவே இந்த விவகாரத்தை விசாரிக்க ED க்கு அதிகாரம் உண்டு.
மாநில அரசும் அதன் உயர் அதிகாரிகளும் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். அமலாக்கத்துறை சட்டத்தின் 50வது பிரிவின்படி, தனிப்பட்ட நபராக இருந்தாலும் அல்லது அதிகாரியாக இருந்தாலும், சம்மன் அனுப்ப இயக்குனரக அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. மாநில அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டால், அது குற்றவியல் விதிகள் மற்றும் சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அனைத்து செயல்களையும் பயனற்றதாக மாற்றிவிடும்” என்றார்.
இந்த வாதங்களை அடுத்து உத்தரவை இன்று (நவம்பர் 28) பிறப்பிப்பதாக தெரிவித்தார்கள் நீதிபதிகள்.
அதன் படி இன்று (நவம்பர் 28) அளித்த உத்தரவில், ‘அமலாக்கத்துறை 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக் காலத் தடை விதிக்கிறோம். அதேநேரம் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் புலனாய்வுக்கு எந்த தடையும் இல்லை. இந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைக்கிறோம்” என்று தெரிவித்து ஒத்தி வைத்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து 3 வாரங்களுக்குள் மீண்டும் இதே பெஞ்ச்சில் முறையீடு செய்வதா அல்லது பெஞ்சின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதா என்று அமலாக்கத்துறை சட்ட ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசுத் தரப்பும் அமலாக்கத்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வது பற்றிய சட்ட ஆலோசனைகளில் இறங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
ரூ.400 கோடி முதலீட்டில் புதிய காலணி தொழிற்சாலை திறப்பு!
சட்டமும் மருத்துவமும் சந்திக்கும் புள்ளிதான் செந்தில்பாலாஜி கேஸ்: அப்டேட் குமாரு