என்ன இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்… உண்மையா?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

கேள்வி: திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது என் கனவு. அதற்காகக் குடும்பம், உறவு எல்லாவற்றையும் துறந்துவிட்டு ஓர் இயக்குநரிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். மற்ற உதவியாளர்களை விட கடுமையாக உழைத்தேன். ஆனால், என்னுடன் பணிபுரியும் சக உதவியாளர்களில் இரண்டு பேருக்குப் பட வாய்ப்பு கிடைத்துவிட்டது. எனக்கு ஏனோ வாய்ப்புகள் தட்டிப் போகின்றன. உழைப்பைவிட, அதிர்ஷ்டம்தான் மேலானதா?

பதில்:

மலையடிவாரத்தில் தென்னந்தோப்பு ஒன்றை ஆசிரமத்துக்காக வாங்கினோம். அதற்கு எவ்வளவு உரம் போட வேண்டும், ஒவ்வொரு கட்டத்திலும் எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று சில முடிவுகள் எடுத்தோம். இப்போது, அதே மரங்கள் முன்பு கொடுத்ததை விட மிக அதிக அளவில் தேங்காய்களை வழங்குகின்றன. அதற்காக, முன்பு யாரிடம் தோப்பு இருந்ததோ, அவரைவிட நான் அதிர்ஷ்டக்காரன் என்று சொல்ல முடியுமா?

Is luck better than hard work?

என்னைப் பார்த்துவிட்டு அதே அளவு உரமும், உழைப்பும் கொடுத்தால், தனக்கும் இதே அளவு காய்கள் கிடைக்கும் என்று நம்பி, மலை உச்சியில் ஒருவர் தென்னைகளை வளர்க்கப் பார்த்தால், என்ன ஆகும்? அவர் பத்து மடங்கு கூடுதலாக உழைத்தாலும் இந்தப் பலன் கிடைக்காது. அவரைப் புத்தியற்றவர் என்று சொல்வீர்களா அல்லது அதிர்ஷ்டமற்றவர் என்று சொல்வீர்களா?

அதே மூலப்பொருள், அதே உழைப்பு என்றாலும், வாய்ப்புகள் என்ன, சூழ்நிலை என்ன என்பவற்றைப் பொறுத்துதான் பலன்கள் அமையும்.

கேள்வி: ஒரே இயக்குநரிடம்தானே மூவரும் பணியாற்றினோம்? மற்ற இருவரைவிட நான் எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டேன்?

பதில்:

எல்லா சந்தர்ப்பங்களிலும் வித்தியாசங்கள் பளீர் என்று வெளிப்படையாகப் புலப்பட்டுவிடாது. சில வித்தியாசங்கள் மிக நுட்பமாக இருக்கும்.

இரு மரங்கள் ஒரே அளவு உயரத்துடனும், பருமனுடனும் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், வெளியில் தெரியாமல் மறைவாக இருக்கும் வேர்கள் எவ்வளவு ஆழத்துக்கு ஊடுருவியிருக்கின்றன என்பதுதான் அம்மரங்களின் ஆயுளையும், தன்மையையும் தீர்மானிக்கும்.

அதேபோல், வெளிப் பார்வைக்கு இரண்டு பேரும் ஒரேவிதமாகச் செயல்படுவதாகத் தோன்றலாம். ஆனால், அவர்களில் ஒருவர் வாழ்க்கையை அதிக தெளிவுடன், கூடுதல் கவனத்துடன், ஆழமான விழிப்பு உணர்வுடன் கையாள்பவராக இருந்தால், அவருக்கு எல்லாமே சாதகமாக நடக்கும்.

Is luck better than hard work?

யாராக இருந்தாலும், எந்த அளவு தகுதி இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் கிடைக்கும். கூடுதலாகவும் கிடைக்காது, குறைவாகவும் கிடைக்காது.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதற்கேற்றபடிதான் உங்களுக்கு கிடைப்பவை அமையும்.

கேள்வி: அப்படியென்றால், அதிர்ஷ்டம் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்கிறீர்களா?

பதில்:

மிக அதிசயமாக எப்போதாவது ஒருமுறை முயற்சி இல்லாமலேயே நீங்கள் ஆசைப்பட்டது உங்கள் மடியில் வந்து விழலாம். விஞ்ஞானம் கூட சில தற்செயல் நிகழ்வுகளுக்கு வாய்ப்பு உண்டு என்கிறது. உலகில் நீங்கள் காணும் பொருள்கள் எல்லாமே தோன்றுவதும், மறைவதும், மறுபடி தோன்றுவதுமாகத்தான் இருக்கின்றன என்கிறது விஞ்ஞானம். இந்த அடிப்படையில், பல லட்சம் முறை இடைவிடாது முயற்சி செய்தால், ஏதோ ஒருமுறை உங்களால் சுவரின் ஊடே கடந்து மறுபடியும் போய்விட முடியும் என்கிறது க்வாண்டம் தியரி.

சுவர் மறையப்போகும் அந்த ஒரு கண நேர நிகழ்வை எதிர்பார்த்து சுவரினூடே நீங்கள் நடந்து கடக்க லட்சம் முறை முயன்றால், என்ன ஆகும்? அந்த வாய்ப்பு நேரும் கணத்துக்குள் உடைந்த கபாலத்துடன் மருத்துவமனையில் அல்லவா கிடப்பீர்கள்?

சங்கரன்பிள்ளை தன் மனைவியைப் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார். மற்ற ஆண்களுடன் அவர் காத்திருந்த அறைக்கு நர்ஸ் வந்தாள். காத்திருந்தவர்களில் ஒருவரிடம், “உங்கள் மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறந்திருக்கிறது” என்றாள்.

Is luck better than hard work?

“நல்ல பொருத்தம்! நான் ஜோடிக்கிளி கம்பெனியில்தான் வேலை செய்கிறேன்” என்றார் அவர்.

அடுத்தமுறை நர்ஸ் வந்தாள். இன்னொருவரிடம், “உங்கள் மனைவி மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறாள்” என்றாள்.

“அட, என்ன ஆச்சரியம்! நான் மூவேந்தர் கம்பெனியில் வேலை செய்கிறேன்” என்று கூவினார் அவர்.

சங்கரன்பிள்ளை வியர்த்து எழுந்தார். “அடுத்தது என் மனைவிதான் பிரசவிக்கப் போகிறாள். நான் வேலை பார்ப்பது ஆறுமுகம் கம்பெனியில் ஆயிற்றே..!”

இதைப் போன்ற தற்செயல் நிகழ்வை எதிர்பார்த்தா காத்திருக்கப் போகிறீர்கள்? வாழ்க்கை பற்றிய கவனம் இல்லாமல், அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருந்தீர்களேயானால், உங்கள் வாழ்க்கை ஆவலும், அச்சமும் நிரம்பியதாக மாறிவிடும். எதிர்பார்ப்புகளால் எப்போதும் படபடப்பாகவே இருக்க நேரிடும். செய்யும் வேலைகளில் கவனம் சிதறும். மாறாக தெளிவான சிந்தனையுடனும், உறுதியுடனும் எதையும் அணுகிப் பாருங்கள். நடப்பது உங்கள் கட்டுப்பாட்டிலாவது இருக்கும்.

கேள்வி: நான் என் கடமையை ஒழுங்காகத்தானே செய்கிறேன்! எங்கே தவறு செய்கிறேன் என்கிறீர்கள்?

பதில்:

அடுத்தவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று உங்கள் பார்வை முழுக்க மற்றவர்கள் மீதே இருப்பதால், நீங்கள் செய்ய வேண்டியதை முழு கவனத்துடன் செய்கிறீர்களா? என்ற கேள்வி எழுகிறது.

ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்பவனின் கவனம் முழுக்க ஓடும் பாதையில்தான் இருக்க வேண்டும். உடன் ஓடிவரும் மற்றவர்கள் எப்படி ஓடுகிறார்கள் என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு இருப்பதால், அவன் ஓட்ட வேகம் குறைந்துவிடாதா? அவனால் எப்படி வெற்றிக் கோட்டைத் தொட முடியும்?

உங்களைவிட அதிகம் பெறுபவர், தான் என்ன செய்கிறோம் என்பதில் நிச்சயமாக உங்களைவிட அதிகக் கூர்மையுடன் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணத்தை விட்டுவிட்டு, எதையும் ஆழ்ந்த கவனத்தோடு அணுகிப் பாருங்கள்.

அதிர்ஷ்டத்தின் தயவு இன்றி, உங்களுக்கும் அமுதம் கிட்டும்!

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024 RCB Vs KKR: பெங்களூரு அணிக்கு ஷாக் கொடுத்த கொல்கத்தா

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ டீஸர்: ஸ்பெஷல் என்ன?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு ஜிஞ்சர் ஜூஸ்

+1
0
+1
2
+1
1
+1
1
+1
1
+1
4
+1
0

1 thought on “என்ன இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்… உண்மையா?

  1. Unga sontha lapathukaga ethanayo kudumpangala seeralinchi poitanga.
    Neenga unmaiyana oruthara iruntha Ella yelai makkalum payanpadura mathiri free ya yoga solli Thara mudiuma guru..apadi seithal yethanayo yelai,naduthara makkal payanadaivarga.
    Unga suya labathukkaga oru kaattaiye alithavar epdi free ya solli Thara mudium..
    Tamilnadu nammalvaar is great person in tamilnadu people and other people

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *