தேசிய அளவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தேசிய கட்சிகளின் பெயரைச் சொல்லி தமிழ்நாட்டில் சில பேர் வழிகள் நடத்தும் திருவிளையாடல்கள் வாடிக்கையானவை.
இப்படித்தான் இந்த தேர்தல் சீசனிலும் திருவிளையாடல்கள் தொடங்கிவிட்டன. இன்று (பிப்ரவரி 21) காலை அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமியை, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கலைவாணன் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார் என்ற செய்தி அதிமுகவின் அதிகாரபூர்வ செய்தித் தொலைக்காட்சியான நியூஸ் ஜெ.வில் வெளியானது.
இதற்கான ஏற்பாட்டை அதிமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாபு முருகவேல் செய்திருக்கிறார்.
மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் தனித்துப் போட்டியிட்டாலும் தான் இன்னமும் இந்தியா கூட்டணியில் இருப்பதாகவே தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியோ இந்தியா கூட்டணியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார், சமீபத்தில் கூட இந்தியா கூட்டணி என்ற காரில் இருந்து ஒவ்வொரு சக்கரமாக கழன்று கொண்டு ஓடுகிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி கட்சியின் தேசிய அளவிலான நிலைப்பாட்டுக்கு எதிராக அவரது கட்சியின் தமிழ்நாடு கிளை முடிவெடுத்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் மாரியப்பன் என்பவரைத் தொடர்புகொண்டு பேசியபோது,’
“இப்போது திரிணமூல் காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் மாநிலத் தலைவரே நியமிக்கப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்பு கலைவாணன் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தார். அவர் இப்போது தேசிய தலைவர் மம்தா பானர்ஜிக்கு தெரிவிக்காமல், தேசிய தலைமையின் ஒப்புதலை பெறாமல் தன்னை தலைவர் என்று சொல்லிக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்தான் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்” என்றார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கலைவாணனைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவரது இணைப்பு கிடைக்கவில்லை.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…