டிசம்பரில் குமரியில் கண்ணாடி இழை பாலம்: அமைச்சர் எ.வ.வேலு

தமிழகம்

விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் பாறைக்குமிடையே கண்ணாடி இழை பாலத்தின் பணிகள் டிசம்பரில் முடிவடையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்துள்ளார்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு
கடலில் அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவிடம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டுவருகின்றன.

கடலில் தண்ணீர் மட்டம் குறையும் நேரத்தில் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் படகு இயக்கப்படும். ஆனால், திருவள்ளுவர் சிலைக்குப் படகை இயக்கவியலாத நிலை ஏற்படும்.

இதற்குத் தீர்வு ஏற்படுத்தும்விதமாக, விவேகானந்தர் நினைவுப் பாறையிலிருந்து திருவள்ளுவர் பாறைக்குப் பாலம் அமைக்க கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் பாறைக்குமிடையே கண்ணாடி இழை பாலம் அமைக்க 37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ஆய்வுப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கிவைத்தார். இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்குமிடையே அமையும் கண்ணாடி இழை பாலம் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம்கொண்ட நடைபாதையாக அமையவிருக்கிறது.

இந்த ஆண்டு, டிசம்பர் மாதத்துக்குள் இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

இந்தப் பாலம், கண்ணாடி இழைகளால் அமைவதால் கடலையும், இயற்கை அழகையும் ரசித்துக்கொண்டே பயணிகள் செல்ல முடியும். விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் பயணிகள் மீண்டும் படகில் ஏறி திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் நிலை ஏற்படாது. விவேகானந்தர் பாறையிலிருந்து நடந்தே திருவள்ளுவர் சிலைக்குச் சென்று பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் வருவாரா குடியரசுத் தலைவர்?

மோடியிடம் செங்கோலை வழங்குவதில் மகிழ்ச்சி: திருவாவடுதுறை ஆதீனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *