கர்மா காரணத்தைக் காட்டி காவலரின் பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் தீர்ப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த முருகன் மதுரை காவல்துறையில் முதல் நிலை காவலராக பணியில் உள்ளார்.
இவர் பணியின் போது உரிய விடுப்பு கேட்காமல் விடுப்பு எடுத்துக் கொள்வது மற்றும் பணியில் கவன குறைவாக செயல்படுவது போன்ற காரணத்தால் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால் மதுரை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி மாற்றி மதுரை மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காவலர் முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி ஸ்ரீமதி, கர்மாவின் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மனுதாரருக்கு இந்த நீதிமன்றம் நிவாரணம் வழங்க முனைகிறது.
அதாவது, கர்மாவின் கொள்கைகளில் “சஞ்சித கர்மா” (முழு கர்மா) “பிராரப்த கர்மா” (கர்மாவின் பகுதி) என்று பிரிக்கப்பட்டுள்ளது. “பிராரப்த கர்மா” (கர்மாவின் பகுதி)க்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் முதல் நிலைக் காவலர் பல தண்டனைகளை அனுபவித்து விட்டார் எனக்கூறி இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று(அக்டோபர் 6) நீதிபதி வேல்முருகன், மகேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, காவலர் இடமாற்றம் என்பது துறை ரீதியான நடவடிக்கை. அதில் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளார்.
இது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இந்த பதவியில் இந்த இடத்திற்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் காவலருக்கு பணி இட மாற்றம் குறித்து தனி நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தனர்.
கலை.ரா
ஆஸ்கர் விருதுக்கு போட்டிபோடும் ஆர்.ஆர்.ஆர்: ராஜமௌலியின் புதிய திட்டம்!
டி20யில் இரட்டைச் சதம்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் அசத்தல்!