கேரளாவின் 20 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள் உட்பட மொத்தம் 88 தொகுதிகளுக்கான 2ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 26) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மக்களைவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.
தொடர்ந்து 2வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.
ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு!
கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பலாவி மாரடைப்பால் சமீபத்தில் உயிரிழந்தார். அத்தொகுதியில் தேர்தல் மே7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேதுல் தொகுதி தவிர்த்து மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி தொகுதியில் தேர்தல்!
அதன்படி கேரளாவின் 20 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், அசாம், பீகார் மாநிலத்தில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள் மற்றும் ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ் கூட்டணி, ஆளும் இடதுசாரிகள் கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி உள்ளது.
மேலும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடும் வயநாடு தொகுதியிலும் தேர்தல் நடைபெறுவதை அடுத்து கேரளா கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
வாக்காளர்கள் விவரம்!
இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 1,098 பேர் ஆண்களாகவும், 102 பேர் பெண்களாகவும், 2 பேர் 3ம் பாலினத்தவர்களாகவும் உள்ளனர்.
அதே போன்று இந்த தேர்தலில் மொத்தம் 8.08 கோடி ஆண்களும், 7.8 கோடி பெண்களும், 5,929 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15 கோடிக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர். இதில் 34.8 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் தேர்தலை அமைதியாக நடத்த உரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்காளர்களுக்காக மொத்தம் 1.67 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி 88 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புது ஹீரோவை புகழ்ந்த சீனு ராமசாமி.. ஃபர்ஸ்ட் லுக் இதோ..!
‘போர்ன்விட்டா’வைத் தொடர்ந்து ஆரோக்கிய பானம் அடையாளத்தை இழக்கும் ‘ஹார்லிக்ஸ்’!