மோடியிடம் செங்கோலை வழங்குவதில் மகிழ்ச்சி: திருவாவடுதுறை ஆதீனம்!

தமிழகம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனை வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

இது தொடர்பாக இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,”புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாடு ஆதினங்கள் வழங்கும் சோழர்களின் செங்கோல் இடம்பெறும் .நேருவிடம் திருவாவடுதுறை ஆதினம் கொடுத்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது” என்றார்.

இந்நிலையில், இந்த செங்கோல் குறித்து திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் பேசுகையில்,”மௌண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைப் பெற்றது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம்.

அதுவும் திருஞானசம்பந்த பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே பெறப்பட்டது. ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’ இந்நாடு விடுதலை பெற்றது சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் என்னும்போது உடல் சிலிர்க்கிறது, உள்ளம் பூரிக்கிறது. எத்தனையோ மொழிகள் இந்நாட்டில் நிலவ நம் செந்தமிழ் ஒலிக்க நாடு விடுதலை பெற்றது” என்றார்.

மேலும், சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மௌண்ட்பேட்டன் தெரிவித்தார். நேரு சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரப்பூர்வ விழாவிற்கு ஏற்பாடு செய்வதில் முனைந்தார்.

அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவர். எனவே, ராஜாஜியிடம் கூறினார். மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசிநல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆனால் அன்றைய ஆதீனம் 20 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்தார்.

எனவே, ஆதீனக் கட்டளைத்தம்பிரான் சடைச்சாமி என்றழைக்கப்பட்ட ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகளையும், ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையையும் டெல்லிக்கு தனி விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று.

அன்றைக்கு பிரபலமாயிருந்த சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச்சின்னம் பொறித்த தங்க செங்கோல் ஒன்று செய்யும்படி ஆதீனத்தில் இருந்து சொல்லப்பட்டது.

புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீனத்தைப் பார்த்து அரசு விழாவில் தான் பாடவேண்டிய திருமுறைப்பாடல் எது எனக் குறிப்பிட்டுக் கட்டளை இடவேண்டும் என்று கேட்டார், ஆதீனமும் கோளறு பதிகத்தை பாட சொன்னார்கள்.

ஆகஸ்ட் 15-ஆம் நாள் நள்ளிரவில், மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் பெற்றார். செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து, ஓதுவாமூர்த்திகள், ‘வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்’ என்று தொடங்குகிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள்.

தற்போது  செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

”என்னிடம் டிக்கெட் கேட்கச் சொன்னீர்களாமே?” உதயநிதியிடம் சிரித்த ஜெய் ஷா

ஆடல்-பாடல் நிகழ்ச்சி : காவல்துறைக்கு புதிய உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *