வரும் ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 1,000 படுக்கைகளுடன் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், அதனை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று திரௌபதி முர்முவை சந்தித்து பேசினார்.
10 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் மருத்துவமனை திறப்பு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
முதல்வரின் அழைப்பை ஏற்று வரும் ஜூன் 5ஆம் தேதி மருத்துவமனை திறப்பு விழாவிலும், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவிலும் கலந்துகொள்ள வருகிறேன் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியதாக டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று (மே 24) குடியரசுத் தலைவரின் வருகை ரத்தாகியிருப்பதாகவும், திரெளபதி முர்மு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் விழாவில் பங்கேற்கமாட்டார் எனவும் டெல்லியிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கலைஞர் மருத்துவமனை திறப்பு தேதி மாற்றி வைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே டெல்லியில் வரும் 28ஆம் தேதி திறக்கப்படவுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறக்கக் கூடாது என்று 19 எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் அங்கமாக இருக்கக் கூடிய குடியரசுத் தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைக்காததன் மூலம், அவரை அவமதித்திருப்பது மட்டுமின்றி, ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் எதிர்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
குடியரசுத் தலைவர் தான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும், பிரதமர் திறந்து வைக்க கூடாது என்றும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக, அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, மதிமுக உட்பட பல்வேறு மாநில எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்தசூழலில் குடியரசுத் தலைவரின் தமிழக வருகை ரத்தாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
”என்னிடம் டிக்கெட் கேட்கச் சொன்னீர்களாமே?” உதயநிதியிடம் சிரித்த ஜெய் ஷா
ஆடல்-பாடல் நிகழ்ச்சி : காவல்துறைக்கு புதிய உத்தரவு!