ஆர்டிஓ அலுவலகத்தில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் சஸ்பெண்ட்!
அரசு பேருந்து பழுதானதாக கூறி ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்திவிட்டு சென்ற ஓட்டுநர் பெர்க்மான்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழுள்ள நாகர்கோவில் ராணித்தோட்டம் ஒன்றாவது பணிமனையின் கட்டுப்பாட்டிலுள்ள ’564’ என்ற எண் கொண்ட விரைவு பேருந்து ‘திருநெல்வேலி – நாகர்கோவில்’ வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து அடிக்கடி பழுதாகி நிற்பதாக பேருந்தை இயக்கும் ஓட்டுநரும் நடத்துநரும் பணிமனை அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர். ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (ஜூலை 18) பெர்க்மான்ஸ் ஒட்டுநர் ஓட்டிக் கொண்டிருக்கும் போது பிரேக் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரேக் பிடித்தால் பேருந்து நிற்காமல் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு சென்றுள்ளது. இதனால் வள்ளியூர் டெப்போவில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு பிரேக்கை சரிசெய்ய சொல்லியுள்ளார். பழுதை சரிசெய்த பிறகு மீண்டும் பேருந்தை இயக்கி பார்த்த போது, முன்பு வலதுபக்கமாக சென்ற பேருந்து இடது பக்கமாக சென்றுள்ளது.
இதற்கு மேல் பேருந்தை இயக்க முடியாது என்று எண்ணிய பெர்க்மான்ஸ் டெப்போ மேல் அதிகாரியிடம் பேருந்தை இயக்க பயமாக இருக்கிறது என்று தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் டெப்போ அதிகாரி சரியான பதிலை கூறவில்லை.
இதனால் ஓட்டுநர் பெர்க்மான்ஸ் பேருந்தை ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்திவிட்டு அதிகாரிகளிடம் புகாரும் அளித்துள்ளார். இதனையடுத்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பேருந்தை ஆய்வு செய்துள்ளனர்.
ஆனால், நல்ல நிலையில் உள்ள பேருந்தை பிரேக் அடிக்கவில்லை என்று கூறி ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தி விட்டு சென்றதாக ஓட்டுநர் பெர்க்மான்ஸை அரசு போக்குவரத்துக் கழகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
மோனிஷா
‘எனக்கும் குடிக்கும் சம்பந்தமில்லை’: மது விலை உயர்வு குறித்து எடப்பாடி
அமைச்சர் மா.சு.வின் திடீர் விசிட் : அதிகாரிகள் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?