நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல்!
தெலங்கானா- 17, ஆந்திர பிரதேசம்-25, மத்திய பிரதேசம்- 8, உத்தரப் பிரதேசம்- 13, மகாராஷ்டிரா- 11, மேற்கு வங்கம்-8, பிகார்-5, ஜார்க்கண்ட்- 4, ஒடிசா- 4 மற்றும் ஜம்மு காஷ்மீர்- 1 என 96 தொகுதிகளுக்கு இன்று(மே 13) நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
சட்டப்பேரவை தேர்தல்!
மக்களவைத் தேர்தலோடு ஆந்திராவில் இன்று 174 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக – தெலுங்கு தேசம் – ஜன சேனா கூட்டணி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
ஒடிசா மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இன்று எங்கெங்கு மழை?
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாரணாசியில் மோடி ரோடுஷோ!
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் 7-ம் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வாரணாசியில் , மே 8 தொடங்கிய வேட்புமனு தாக்கல் மே 14ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வாரணாசி செல்லும் பிரதமர் மோடி இன்று ரோடுஷோ நடத்துகிறார்.
பிளஸ் 1 சேர்க்கை!
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 10ஆம் தேதி வெளியான நிலையில் பிளஸ்1 மாணவர் சேர்க்கை தமிழகம் முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது. அரசு, அரசு மானியம் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற உள்ளது.
ஹேமந்த் சோரன் ஜாமின் மனு விசாரணை!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருக்கும் நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சூரி சசிகுமாரின் கருடன்!
விடுதலைப் படத்தை தொடர்ந்து சூரியின் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் கருடன். சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று படக் குழு அறிவித்துள்ளது.
ஐபிஎல் அப்டேட்!
இன்று நடைபெறும் 63ஆவது லீக் ஆட்டத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது.
பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல் விலை 58 ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஹஜ் பயணம் – மருத்துவ முகாம்!
தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி!
இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டா உருட்ட போறீங்க – அப்டேட் குமாரு
ட்விஸ்ட் வைத்த சிஎஸ்கே: ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் இதுதான்!
அதிரடி காட்டிய ருதுராஜ்… பிளே ஆஃப் வாய்ப்பை பிரைட் ஆக்கிய சிஎஸ்கே!