அன்னவாசல் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நேற்று (ஜூலை 18) மதியம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இயங்கி வரும் மனநல காப்பகத்தை பார்வையிட்டார்.
அந்த காப்பகத்தில் சுமார் 50 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். காப்பகத்தில் இருந்த பெண்களுக்கு படுக்கை வசதியும் இல்லை. அதுமட்டுமின்றி முற்றிலும் சுகாதாரமற்ற அறையில் உணவு தயாரித்து வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனை கண்ட அமைச்சர் காப்பகத்தின் வார்டனிடமும் அதிகாரிகளிடம் “உங்கள் வீட்டு பெண்களை இது போன்று அடைத்து வைப்பீர்களா? 50 உயிர்களை மனசாட்சியே இல்லாமல் இப்படியா வைத்திருப்பீர்கள். இதெல்லாம் மனுஷன் தங்குகிற இடமா?” என்று காட்டமாக கேள்விகளை எழுப்பினார்.
மேலும் காப்பகத்தில் தங்கியிருந்த பெண்களிடம் விசாரித்த போது அவர்கள், “2 வருடங்களாக இங்கு இருக்கிறோம். சாப்பிடுவதற்கு ரசம் சாதம் மட்டும் தான் தருவார்கள்” என்று தெரிவித்ததோடு, தங்களை இந்த இடத்தில் இருந்து காப்பாற்றி விடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடியாக தொண்டு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார். மேலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கி வரும் அனைத்து மனநல காப்பகத்தை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். புதுக்கோட்டை சுகாதாரத்துறை இணை இயக்குநரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து அன்னவாசல் அரசு மருத்துவமனை காப்பகத்தில் இருந்த 50 பெண்களும் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சரியில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வழிநடத்தினால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
மோனிஷா