கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் என்று அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் ‘சிங்கப்பெண்’ என பலரும் பாராட்டப்பெற்றவர் தான் கோவை பெண் ஒட்டுநர் ஷர்மிளா. ஆட்டோ ஓட்டுநரின் 24 வயது மகளான இவர் டிப்ளமோ ஃபார்மசி முடித்துள்ளார்.
கோவைக்கு சென்று ‘ஷர்மிளா’ என்று விசாரித்தால் தெரியாது என்று தான் சொல்வார்கள். ஆனால் ;ரைடர் ஷர்மிளா’ என்று சொன்னால் பலருக்கும் தெரியும் என்ற அளவிற்குப் பிரபலமானவர்.
சிறு வயதில் இருந்தே வாகனங்கள் மீது கொண்ட காதலால் வீட்டின் அருகே இருக்கும் கடைக்குக் கூட பைக்கில் சென்று வருவதில் இருந்தே தொடங்கியது இந்த ரைடர் பயணம்.

தந்தையின் முழு ஆதரவோடு இருசக்கர வாகனத்தைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிய இவர் பின்னர் ஒரு தனியார் பேருந்தில் ஒட்டுநராக பணிபுரிய ஆரம்பித்தார். கோவை காந்திபுரம் – சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை நாள்தோறும் இயக்கி வருகிறார்.
பேருந்தில் பயணிக்கும் சிலர் இவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதும் உண்டு. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஷர்மிளா ஓட்டி செல்லும் பேருந்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி பயணித்தார்.

கனிமொழி பயணம்
விடியற்காலை முதல் இரவு வரை பேருந்து ஓட்டுவது ஷர்மிளாவிற்கு உடல் ரீதியாக சிரமத்தை கொடுத்தாலும் பிடித்த வேலை என்பதால் மிகவும் மகிழ்ச்சியாகவே செய்து வந்தார்.
இவர் ஒட்டிச்சென்ற பேருந்தில் இன்று (ஜூன் 23) காலை திமுக எம்.பி கனிமொழி பயணம் செய்தார். ஷர்மிளாவை பாராட்டிய கனிமொழி அவரிடம் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவியது.

இந்நிலையில் இன்று மதியம் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இது குறித்து ஷர்மிளா, “காலையில் கனிமொழி மேம் என்னைப் பார்த்துவிட்டு செல்வதற்காக வந்திருந்தார். டிக்கெட் வாங்கி தான் பயணம் செய்தார். அந்த பேருந்தில் 3 நாட்களாக ஒரு பெண் நடத்துநரை பணிக்கு வைத்திருந்தனர்.
அந்த பெண் நடத்துநர், ‘கனிமொழி மனம் புண்படும் அளவிற்கு, எத்தனை பேர் வந்திருக்கீங்க, யாராக இருந்தாலும் சரி டிக்கெட் எடுங்க’ என்று பேசினார். அப்படிப் பேசாதீர்கள் என்று சொன்னோம். தொடர்ந்து காந்திபுரத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு ஆஃபிஸில் புகார் அளிக்கலாம் என்று சென்றேன்.
பாபுலாரிட்டி தேவை என்றால் கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்
நான் நடத்துநர் நடந்து கொண்ட விதத்தை ஓனரிடம் சொல்லும் போது முதலில், ஆமாம் அப்படி பேசி இருக்க கூடாது என்று சொன்னவர், பின்னர் நான் பாபுலாரிட்டி தேடுவதற்காக பேருந்தில் அனைவரையும் ஏற்றுகிறேன் என்று பேசினார்.
கனிமொழி பேருந்தில் வருவதை முன்பே சொல்லவில்லை என்று சொன்னார். கனிமொழி 23 ஆம் தேதி வருவார் என்பதை நான் மேனேஜரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
ஆனால் அந்த நேரத்தில் மேனேஜர் ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று சொல்லிவிட்டார்.
இதனால் என் அப்பா கோபமாக பேசினார். அதற்கு உரிமையாளர் ”நான் ஓனர் எங்கிட்ட திமிரா பேசாத… வேணும்னா உன் பிள்ளைய கூட்டிட்டு போ” என்று சொன்னார். அதனால் நாங்கள் கிளம்பி வந்துவிட்டோம்.

எப்பவும் என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லு என்று சொன்னவர் இன்று இப்படி பேசுகிறார். பொறுமையாகவே பேசவில்லை. மிகவும் சங்கடமாக இருந்தது. வானதி சீனிவாசன் பேருந்தில் பயணம் செய்தபோது சொல்லாமலேயே வந்தார்கள். ஆனால் கனிமொழி முன்கூட்டியே சொல்லிவிட்டுத் தான் பேருந்தில் பயணிக்க வந்தார்.
இதை ஏற்கனவே உரிமையாளரிடம் தெரிவித்து விட்டோம். ஆனால் எங்களிடம் சொல்லவில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். காலையில் 5.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை கஷ்டப்பட்டு பேருந்து ஓட்டும் என்னைப் பார்த்து பாப்புலாரிட்டிக்கு செய்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
பாப்புலாரிட்டி தான் வேண்டும் என்றால் இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஒரு பெண் பேருந்து ஓட்டுகிறார் என்று செய்தி வந்து பிரபலமான போதே இதை விட்டிருக்கலாமே. டிரைவர்களின் நிலைமை இதுதான். ஏதோ ஆசைக்காக 3 மாதங்கள் வாகனம் ஓட்டினேன்” என்று வருத்தத்துடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
வேதனையாக இருந்தது
ஷர்மிளாவின் தந்தை மகேஷ், “காலையில பஸ்ல கனிமொழி மேடம் வந்திருந்தாங்க. அப்போது பெண் நடத்துநர் டிக்கெட் வாங்க சொன்னாங்க. அதற்கு என் மகள் ‘அவங்க டிக்கெட் வாங்கிட்டாங்க, அவங்ககிட்ட டிக்கெட் கேட்காதீங்க’ என்று சொன்னார். அவங்க (கனிமொழி) டிக்கெட் எடுத்தது காந்திபுரத்தில் இருந்து சோமனூர் செல்வதற்கு. ஆனால் பாதியிலேயே இறங்கிவிட்டார்.

என் மகள் பேருந்தில் இருந்து இறங்கி அவங்க டிக்கெட் எடுத்துவிட்டு தானே ஏறினாங்க. ஒரு எம்.பி கிட்ட ஏன் டிக்கெட் கேட்டீங்க என்று கேட்டபோது இரண்டு பேருக்கும் விவாதம் ஆகிவிட்டது.
ஆஃபிஸில் புகார் அளிக்க சென்றபோது, கனிமொழி வருவார் என்று சொல்லவே இல்லை. அதற்கு நான் கோபமாக, முன்பே சொன்ன நான் என்ன பைத்தியக்காரனா என்றதற்கு ‘உன் பிள்ளைய கூட்டிட்டு கிளம்புங்க’ என்றார். அப்படிப் பேசியவுடன் மிகவும் வேதனையாக இருந்தது” என்றார்.
அப்படி எதுவும் நடக்கவில்லை
இந்த விவகாரம் தொடர்பாக பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு, “நான் வழக்கம் போல 11.30 மணிக்கு ஆஃபீஸுக்கு வந்தேன். ஷர்மிளாவும் அவங்க அப்பாவும் வந்தாங்க. வந்த உடனேயே ஷர்மிளா நான் வேலையை விட்டு போகிறதா எழுதிக் கொடுத்துட்டு போறேன் என்று சொன்னார். நான் உடனே ‘என்னம்மா சிரமமா இருக்கிறதா’ என்று கேட்டேன்.
அதற்கு ஷர்மிளாவின் அப்பா ‘என்ன பிரச்சனை என்று சொல்லு’ என்றார். அப்போது ஷர்மிளா ‘காலையில் கனிமொழி மேடம் வந்தாங்க. நீங்க போட்டுருக்க லேடி கண்டக்டர் அவங்க கிட்ட டிக்கெட் கேட்டாங்க. அது எனக்கு அசிங்கமா போயிடுச்சி’ என்று சொன்னார். நான் உடனே கனிமொழி வராங்க என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் பார்த்துக் கொண்டிருப்பேன். சரி நீங்க கிளம்புங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நடத்துநரை வர சொன்னேன்

உடனே இவர்கள் கத்த ஆரம்பித்து விட்டார்கள். மேனேஜரை பார்த்து முன்பே சொல்லியிருந்தோம். ஆஃபீஸ்ல சொல்லலயா என்று கேட்டார்கள். நான் உங்க பிள்ளைய கூட்டிட்டு போங்க என்ற வார்த்தையை சொல்லவே இல்லை.
பிழைப்பு நடத்தும் இடத்தில் சத்தம் போடாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் கிளம்புங்கள் என்று சொன்னேன். அவர்களும் கிளம்பி விட்டார்கள். வேறு எதுவும் நடக்கவில்லை.
வேலைக்கு செல்கிறார்களா, வீட்டிற்கு செல்கிறார்களா என்று கூட சொல்லவே இல்லை. ஏதோ நான் அரசியல் ரீதியாக இன்சல்ட் செய்து விட்டதாக கூறுவது தவறு. தனிப்பட்ட முறையில் திமுக குடும்பத்தின் மீது மரியாதை வைத்திருக்கிறோம்.
ஒரு பெண்ணிடம் வண்டியைக் கொடுக்கும் போதே நிறைய பேர் எந்தளவிற்கு வரவேற்பு கிடைக்குதோ அந்த அளவிற்குப் பிரச்சனை வரும் என்று சொன்னார்கள். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று தெரியாது” என்று என்றார்.
மோனிஷா
பால சாகித்ய புரஸ்கார் விருது… தமிழ் எழுத்தாளர் உதய சங்கருக்கு அறிவிப்பு!
புதிய தேர்வுக்குழு தலைவர்: பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Comments are closed.