”கலக்கமடைந்துள்ளேன்”: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

சினிமா தமிழகம்

’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்காக வந்து ரசிகர்கள் எதிர்கொண்ட சிரமங்களை பார்த்து கலக்கமடைந்துள்ளதாகவும், அனைத்திற்கும் தான் பொறுப்பேற்பதாகவும் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்,

சென்னை ஈசிஆரில் பனையூர் அருகே ஆதித்யராம் மைதானத்தில் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசைக் கச்சேரி நேற்று மாலை (செப்டம்பர் 10) நடந்தது.

ஆனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் போட்டப்பட்ட இருக்கைகளுக்கு 4 மடங்கு அதிகமாக டிக்கெட் விற்றுள்ளனர். இதனால் கூட்டம் அதிகரித்த நிலையில், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளே சென்று இருக்கை கிடைக்காமலும் தவித்தனர்.

மேலும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பார்க்கிங் வசதியும் சரியாக செய்யப்படாததால், ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், மதுரை, கோவை பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தெல்லாம் வந்த ரசிகர்கள் நிகழ்ச்சியை காண முடியாமல் அதிருப்தியுடன் திரும்பி செல்லும்  நிலை ஏற்பட்டது.

ரசிகர்கள் அதிருப்தி- மன்னிப்பு!

இதுகுறித்து நேற்று இரவு முதல் சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் வைத்த நிலையில், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ‘ACTC Events’ நிறுவனம் இன்று மன்னிப்பு கேட்டது.

எனினும் கோபம் அடங்காத ரசிகர்கள், ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு பொறுப்பேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து டிக்கெட்டுகான பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

டிக்கெட் நகலை அனுப்புங்கள்!

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் ரசிகர்களிடம் டிக்கெட் நகலை தனக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.

அவர், “அன்பான சென்னை மக்களே, நேற்று நடந்த இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட்டை வாங்கிவிட்டு துரதிருஷ்டவசமாக கலந்து கொள்ளாமல் திரும்பி சென்றவர்கள் டிக்கெட் நகலை அனுப்புங்கள். அதனை உங்கள் குறைகளுடன் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். எங்கள் குழுவினர் விரைவில் பதிலளிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். எனினும் டிக்கெட் நகலை அனுப்பி வைத்துவிடலாம். ஆனால் எங்களுக்கு ஏற்பட்ட மனவலியை எப்படி உங்களுக்கு திருப்பி அனுப்ப முடியும்? என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நான் பொறுப்பேற்கிறேன்!

அதனைத்தொடர்ந்து, தி இந்து நாளிதழுக்கு இன்று ஏ.ஆர். ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில், ”நேற்றைய இசைநிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொருவரும் எங்களுக்கு முக்கியமானவர்கள். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது என்னை வெகுவாக பாதித்துள்ளது. சுனாமி போல் திரண்டு வந்த ரசிகர்களின் அன்பை சரியாக கையாள தவறிவிட்டோம்.

இசைநிகழ்ச்சிக்கு உலகத்தரம் வாய்ந்த ஏற்பாடுகள் தேவை என்பது நான் கற்றுக்கொண்ட பாடம். நேற்றைய இசைநிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ரசிகர்கள் நேற்று சந்தித்துள்ள அனைத்தையும் நினைத்து பார்க்கையில் கலக்கமடைந்துள்ளேன். மிகுந்த மனவேதனை ஏற்பட்டுள்ளது” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

”இம்மானுவேல் சேகரனார் வழியில்…”: பரமக்குடியில் உதயநிதி

செந்தில்பாலாஜி ஜாமீன்: அமலாக்கத்துறை பதில் என்ன?

ரஜினிகாந்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *