சென்னையில் இன்று (நவம்பர் 4) அதிகாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், 4 மாவட்டங்களில் இரவு 8.30 மணி வரையிலும் தொடர் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்யும் என்றும், சென்னையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் நேற்று அறிவித்தது.
ஏற்கெனவே கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது.
சென்னையில் நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், சூளைமேடு, கோடம்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி மழையுடன் கனமழை பெய்து வருகிறது.
மேலும் இந்த கனமழையானது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இரவு 8.30 மணி வரையிலும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி மக்கள் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா