ஊரடங்கு கடுமையாகக் கடைபிடிக்கப்படும்: ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

public

சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பால முரளிக்கு, டிஜிபி அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் துறையினர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, பேசிய ஆணையர் விஸ்வநாதன், “நாளை முதல் வரும் ஜூன் 30வரை கடுமையாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும். அரசு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 2 கி.மீட்டருக்குள்ளேயே நடந்து சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த பொருள் அங்குதான் கிடைக்கும், இங்குதான் கிடைக்கும் எனக் காரணம் கூறி வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். உரிய அனுமதி இல்லாமல் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சென்னை பெருநகரை விட்டு வெளியே வேலைக்குச் செல்லும் தினசரி பணியாளர்களுக்கு அனுமதி இல்லை. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களைக் கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும்.

சென்னைக்குள் மட்டும் 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும். போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

மவுண்ட் ரோடு உட்படச் சென்னையின் பிரதான சாலைகள் மூடப்படும். திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது. ஏற்கனவே பெற்ற பாஸை ரீ-வேலிடேட் செய்ய வேண்டும்.

சென்னையில் கடைகளும் நேரக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். இம்முறை ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படும். சென்னையில் மாவட்ட எல்லைகள் மற்றும் மாவட்ட பகுதிக்குள் 18 ஆயிரம் போலீசார் ஈடுபடவுள்ளனர். பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க 10 சதவிகிதம் போலீசாரை காத்திருப்பில் வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *