sகொல்கத்தா மேம்பால விபத்து-இராஜ்யஸ்ரீ சென்

public

நெரிசல்மிகுந்த வீதியில் மாபெரும் மேம்பாலம் ஒன்று இடிந்துவிழுந்து, அதற்கிடையில் ஆட்டோ ரிக்சாக்கள், சிறு பேருந்துகள், வழிப்போக்கர்கள் மற்றும் கான்ஸ்டபிள்கள் மாட்டிக்கொண்டனர். நீங்கள் வியாழனன்று நிகழ்ந்த இந்தச் செய்தியைப் பார்த்தால் அதில் மாட்டிக்கொண்டவர்கள், கற்குவியலில் இருந்து வெளியேற கைகளை ஆட்டிக்கொண்டிருப்பதைக் காண்பீர்கள். ஒரு மனிதன், இரண்டு டாக்ஸிகளுக்கிடையே மாட்டிக்கொண்டிருக்க அவனுடைய கை,கால்களும், தலையும் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன.

அவனுடைய இடுப்புக்குக் கீழிருக்கும் பகுதியை இரும்புப் பாளம் அழுத்திக்கொண்டிருந்தது. கற்குவியலில் இருந்து கைகள், நீட்டிக்கொண்டு யாரேனும் இழுத்துவிடுவார்களா? குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்ற பரிதவிப்பில் ஆடிக் கொண்டிருந்தன. படுகாயம் நிறைந்த உடல்கள். மருத்துவமனையில் உயிர்பிழைத்தோர் ஒருவருக்குப்பின் ஒருவரென கிடந்த அவலம்.

இது நிகழ்ந்தது, கொல்கத்தாவின் மையமான கீரிஷ்பார்க் என்ற இடத்தில். இந்த மேம்பாலத்தின் அடியில் நான் அடிக்கடி வண்டியில் போயிருக்கிறேன். 2014ம் ஆண்டு செய்திக்குறிப்பில், அறுபது மாதங்களாகக் கட்டப்படும் இந்த மேம்பாலம் இன்னும்கூட முடியாதநிலையில் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அந்தச் செய்தி, IVRCL எனும் கம்பெனிதான் கொல்கத்தா பெருநகர வளச்சிக் குழுமத்திடமிருந்து [CMDA] பாலத்தைக் கட்ட அனுமதிபெற்றுள்ளது எனவும் அது, அரசாங்கத்திடம் மேம்பாலத்தை முழுவதுமாக கட்டி முடிக்கவேண்டுமெனில் கூடுதல் நிதி தேவை எனக் கேட்டிருப்பதாகவும் கூறுகிறது. ஆனால், ஒப்பந்தப்படி இதை நாற்பத்திரண்டு மாதங்களுக்குமுன்பே கட்டி முடித்திருக்கவேண்டும்.

அந்த அறிக்கை மேலும் கூறுவதாவது: கணேஷ் திரையரங்கம் அருகில் சாலையை அடைத்துக்கொண்டிருந்த இரும்புப் பாளமானது மேம்பாலத்திலிருந்து விழுந்ததைப்போல் தெரியவில்லை. மாறாக, சாலைக்குப் போடப்பட்ட இரும்புக் கதவாகத் தெரிந்தது. தவிர, இரண்டு பாளங்கள் போஸ்டா பஜாரின் குறுக்கே விழுந்துகிடந்தன. இருப்பினும் பெருநகர வளர்ச்சி குழுமம் இதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை.

குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளுக்கு மிக அருகில் மேம்பாலங்கள் கட்டப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஒருவகையில் இது உண்மையே. கொல்கத்தாவில் கட்டடங்களுக்கும், கட்டப்படும் மேம்பாலங்களுக்கும் உள்ள தூர இடைவெளி ஆறடி மட்டுமே.

இலோயர் சர்க்குலர் சாலை மேம்பாலம் கட்டப்பட்டபிறகு, ஒரு நகைச்சுவை விஷயம் பரவலாயிற்று. அது, ‘ஒரு வண்டியில் அந்தப் பாலத்தில் சென்று பக்கத்தில் இருக்கும் `லா மார்ட்டினியரி’ பள்ளி வகுப்பில் இருக்கும் பென்சிலை கைவிட்டு எடுத்துவரலாம்’ என்பதே.

இதுதான் கொல்கத்தா மேம்பாலங்களின் இலட்சணம்; இவற்றைக் கட்டிமுடிக்க பல ஆண்டுகள்வேறு.இந்தப் பெருநாசம் என்னில் பேரிடர் செய்துவிட்டது. காரணம், இது நான் பிறந்து வளர்ந்த நகரம். அந்தச் சாலையில்தான் பயணம் செய்வேன். நீங்கள் கொல்கத்தாவில் வசிப்பவராக இருந்தால் இச்சம்பவத்தை அடிக்கடி எதிர்பார்க்கலாம்.

மேம்பாலங்களை, பாலங்களை, சாலைகளை நிர்மாணிப்பதில் நேர்மையற்றமுறையே கையாளப்படுகிறது. நமது மெட்ரோ ஒன்றைக் கட்ட வேண்டுமானால் பத்து வருடங்கள் எடுத்துக்கொள்ளும். வேகமானமுறையில் நடக்கும் வேலைகள் எதுவெனில், சாலையோர விளக்குகள் மற்றும் பலவேறு கட்டடங்களுக்கு நீலநிறம் அடிப்பது. அவ்வளவே!

விபத்தில் சிக்கிக்கொண்டோரைக் காக்கும் முயற்சியை காணும்போது உங்களுக்கு நம்பிக்கை போய்விடும். அங்கே எந்தவொரு கிரேனும் இல்லை. பாதுகாவலர்கள் வருவதற்குள் சரியாக ஒரு மணி நேரமும், நாற்பத்தைந்து நிமிடங்களும் ஓடிவிட்டன. அவர்கள் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியபோது, இரும்புப் பாளங்களை கைகளால், கம்பிகளால் தூக்க முயன்றனர். பிறகு, வெல்டிங் மிஷினால் அறுக்க முயன்றனர். அதில் ஒரு மிஷினானது சுற்றுப்புறத்தை தீயால் பற்றவைத்துவிட்டது.

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவும், இராணுவமும் அங்கே இருந்ததுதான். ஆனால், பெருத்த நிர்ப்பந்த நிலையிலே பணிபுரிந்தனர். இடிந்து நொறுங்கிய மேம்பாலத்தினடியில் மாட்டிக்கொண்ட மக்களின், வண்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாது. அது நடந்து ஏழுமணி நேரங்களுக்குப் பிறகும் கூளங்களுக்கடியில் மாட்டிக்கொண்டிருப்பது ஒரு பேருந்தா அல்லது இரண்டா என்று ஒருவராலும் சொல்ல இயலவில்லை.

இந்திய பெருநரகத்துக்கே இந்த கதி எனில், இந்தியாவின் மற்ற பகுதிகளைக்காக்க கடவுள்தான் வரவேண்டும்.

கடவுளைப் பற்றி பேசும்போது, கே.பி.இராவ் [IVRCL] என்பவர், ‘நாற்பத்தைந்து சதவிகிதப் பணி மட்டுமே மிச்சம். ஒரு பாளம் தவறிவிட்டது. மற்றொன்று விழுந்துவிட்டது. இது, கடவுளின் செய்கையாகும்’ என்று கூறியிருக்கிறார். அவரை கொண்டுபோய் சிறையில் பூட்டி சாவியைத் தொலைத்துவிட்டால் அவருக்கு கடவுள் என்ன செய்வார் என்று தெரியவேண்டும்.

இதில் ஆறுதலான விஷயம் ஊடகங்களின் கவனிப்பே. இந்தியா டுடே-யின் மனோகியா லொய்வால் என்பவர், அங்கே வேடிக்கை பார்க்க வந்தவரிடம், நீங்கள் எந்தளவு கோபத்தை உணருகிறீர்கள்? என்று கேள்வி கேட்டார். யாருமே பாதிக்கப்பட்டவரிடம் தேறுதலாகக் கேட்கவில்லை. ஆனால், டைம்ஸ் நவ்-லிருந்த நிருபரே அமைதியுடனும், ஆதங்கத்துடன் கேள்விகளைக் கேட்டார். எல்லா சேனல்களும் கிரிக்கெட் நிகழ்வை தள்ளிவைக்க, டைம்ஸ் நவ் மட்டும் அதைத் தள்ளிவைக்கவில்லை.

உள்ளூர்த் தொலைக்காட்சிகளான ABP ANANDA மற்றும் ETV BANGLA ஆகிய சேனல்கள், இந்த பெருநாசத்தை மிக அமைதியுடன் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். ETV-ல் ஒரேயொரு சோகம் என்னவெனில், இந்தச் செய்திக்கு இடையிடையே திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் விளம்பரப் பாடல், அனுபம் ராயால் பாடப்பட்டுக் கொண்டிருந்தது. ‘வங்காளத்தின் முகம் மிக நன்றாக மாறிவிட்டிருக்கிறது, நல்ல நாட்கள் இனிமேல் வரப்போகிறது.’

பேரழிவு சமயங்களில், அதை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்கள் எவ்வித இடையூறுமின்றி ஒளிபரப்ப வேண்டுமெனத் தெரியாதா? குறை காணுவதையும்மீறி மற்றொரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் முதலமைச்சர், தம் எல்லா நிகழ்ச்சியையும் ரத்து செய்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரைந்ததுதான். மனிதக்கரங்கள் விளைவித்த இந்த நாசகாரியத்துக்கு அவரின் ஓட்டு எண்ணிக்கையை குறைக்கக்கூடாதுதான். ஆனால், நம் எல்லா முதலமைச்சர்களுக்கும், பிரதம மந்திரிக்கும் இதுவொரு பாடம். மம்தா பானர்ஜி, நான் பார்த்துக்கொண்டிருந்த வரை இரவு பத்துமணி வரையிலும் இருந்தார்.

கட்டுமான நிறுவனத்திலிருந்து கைதாகியிருக்கும் நபர்கள், குறைந்தகாலத்தில் வெளியே வந்துவிடுவார்கள். நமது அரசியல்வாதிகள் அனைவரும் பேசுவார்கள். ஆனால், எதையும் செய்யமாட்டார்கள்.

கொல்கத்தாவில், ‘என் தாய் வீட்டில்’ நடந்த இந்த பயங்கரச் சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. இதில் சோகமானது என்னவெனில், ஊடகங்கள் இந்த விஷயத்தை மறந்து மற்றவற்றில் கவனம் செலுத்தும்போது, கொல்கத்தாவும் பழைய நிலைமைக்கு வந்துவிடும். இதேபோல், மற்றொரு சம்பவம் நடக்கும்வரைக்கும்.

தமிழில்: பெரு.முருகன்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *