hசாலை பணியைத் தொடங்கக்கோரி சாலை மறியல்!

Published On:

| By admin

புதுக்கோட்டை மாவட்டம், வேப்பங்குடியில் நிறுத்தப்பட்ட சாலை பணியைத் தொடங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி திருச்சி – மீமிசல் சாலை பணி ஓராண்டுக்கு முன்பு ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் அந்தப் பணிகள் நடைபெறாமல் பாதியில் நின்றது.
இதனால் சாலைகளில் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி பலமுறை அங்குள்ளவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை எழுப்பினர். இந்த நிலையில் மீண்டும் சாலை பணியை உடனடியாக தொடங்கி தரமான முறையில் சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் திருவரங்குளம் கடை வீதி புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வருகிற மே மாதம் 30ஆம் தேதிக்குள் சாலை பணியை முடித்து தருவதாக உதவி செயற்பொறியாளர் வாக்குறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
**-ராஜ்**
.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share