அரசு அறிவித்த ஊதியம் கிடைப்பதில் தாமதம்: தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

Published On:

| By Balaji

குறைந்தபட்ச கூலியாக ரூ.425.40 நிர்ணயம் செய்து அரசு அறிவித்த ஊதியம் கிடைப்பது எப்போது என்ற எதிர்பார்ப்பில் கடந்த ஆறு மாதங்களாக தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் காத்திருக்கும்நிலையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 25ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாகத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

மலைப்பிரதேசமான வால்பாறையில் தேயிலை தோட்டங்கள் அதிகம் உண்டு. இங்கு எட்டு பெரிய நிறுவனங்களும், முப்பது சிறிய நிறுவனங்களும் தேயிலை எஸ்டேட்டை நடத்தி வருகின்றன. அதன்படி 35,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த எஸ்டேட் பகுதிகளில் 22,000 நிரந்தர தொழிலாளர்களும், 3,000 தற்காலிக தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். இந்தத் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.351 வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் தொழிற்சங்கங்கள் சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.425.40ஐ கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த அறிவிப்பு வெளியிட்டு ஆறு மாதங்கள் ஆகியும் அரசாணை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. எனவே உயர்த்தி அறிவிக்கப்பட்ட கூலி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள அவர்கள், “கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு கிடைக்கும் என்று காத்திருந்தோம். இந்தநிலையில் குறைந்தபட்ச கூலியை அரசு அறிவித்தது. ஆனால் அரசாணை வெளியிடவில்லை. இதனால் எங்களுக்கு பழைய கூலிதான் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் தொழிலாளர்கள் பலர் நம்பிக்கையை இழந்து வேறு வேலைக்குச் சென்று வருகிறார்கள். தேயிலை பறிக்கும் பணியின்போது அட்டை கடிக்கும் என்ற நிலைதான் இருந்தது. ஆனால், தற்போது அது மாறி யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை தாக்குதலுக்கு மத்தியில் நாங்கள் தினமும் வேலை செய்து வருகிறோம்.

ஆனால், எங்களுக்கு கூலி உயர்வு அறிவித்துவிட்டு அதற்கான அரசாணையை வெளியிட ஏன் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது என்பது தெரியவில்லை. எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுத்து உயர்த்தி அறிவித்த கூலிக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே, தொழிற்சங்கங்கள் சார்பில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 25ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share