Wசெவிலியர்கள் குண்டுகட்டாக கைது!

public

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் சிகிச்சை அளிப்பதற்காக 4000 தற்காலிக செவிலியர்கள், தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையம் மூலம் 7.5.2020 அன்று தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ஏற்கனவே 800 பேர் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்றுவிட்டனர். மீதமுள்ள 3200 பேரில் 2400 பேருக்கு மட்டும் நிரந்தர பணி வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 800 பேருக்கு நிரந்தர பணி வழங்குவது தொடர்பாகச் சுகாதாரத் துறையுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது, காலி பணியிடங்கள் ஏற்படும் போது இந்த 800 பேருக்கும் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த 800 பேரும் மார்ச் இறுதியில் நீக்கம் செய்யப்பட்டதாக செவிலியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனை கண்டித்து நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டனர்.

இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் இன்று காலை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக டிசம்பர் 13 2022 அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவையும் செவிலியர்கள் தங்கள் பதாகைகளில் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின், ”கோவிட் 19 தொற்றிலிருந்து பொது மக்களின் உயிர் காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்குத் தற்காலிக பணிக் காலம் நிறைவடைகிறது. கொரோனா அபாயம் நீங்காத நிலையில் செவிலியர்களின் சேவை மற்றும் தேவை கருதி அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தப் பதிவை குறிப்பிட்டு பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். அதுபோன்று கலைஞர் நினைவிடத்துக்குச் சென்று நீதி கேட்போம் என புறப்பட்ட சில செவிலியர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் கைது செய்தனர்.


எனினும் பணி நீக்கம் செய்யப்பட்ட மேலும் சில செவிலியர்கள், சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர்.

மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். எனினும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களையும் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *