iசாலக்குடி கறுப்பன் கலாபவன் மணி! -ராகவன்

public

2016ம் ஆண்டு மலையாள சினிமாவுக்குப் போதாத காலம். அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் மலையாள திரையுலகின்மீது ஒரு சோர்வை உருவாக்கியிருக்கிறது. அனைவராலும் நேசிக்கப்படும் பெண்ணாகவும், நல்ல நடிகையாகவும் இருந்த கல்பனா இறந்தார். இளம் வயதிலேயே இயக்குநர் ராஜேஷ் பிள்ளை இறந்தார். இசையமைப்பாளர் ராஜாமணி இறந்தார். ஒளிப்பதிவாளார் ஆனந்தகுட்டனும் இறந்தார். இவர்கள் அனைவருமே இப்போதும் உற்சாகமாக உழைத்துக் கொண்டிருந்தவர்கள். அந்த வரிசையில் வயதில் குறைந்த கலாபவன் மணியும் இப்போது இல்லை.

கலாபவன் மணிக்கு மலையாள சினிமாவில் உள்ள இடம் என்ன? சினிமாதான் மணியை அடையாளப்படுத்தியதா என்றால், தன் தனித்துவமான திறமையால் வென்ற ஒரு கலைஞனாக மணியை நாம் கண்டுணர முடியும். சாலக்குடி பிரதான சாலைவழியே பயணப்படும் எவரும், சாலக்குடி புழாவைக் காணாமல் செல்லமுடியாது. இயற்கை அழகான அந்தப் புழாவின் நிறம் கறுப்பு. அதுதான் மணியின் நிறமும். அந்தப் புழாவின் கரையில் ஒரு ஏழையின் குடிசையில் பிறந்த மணிக்கு, நாட்டுப்புறப் பாடல்கள் பள்ளி வயதிலேயே பரிச்சயம் ஆனது. 90களில் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக அவர் மேடைகளில் அறிமுகமானார். பல குரலில் பேசி, மக்களை அசத்தியபோதும் அது மணிக்கு போதுமானதாக இருக்கவில்லை. இன்னும் மேடையை தன் வசப்படுத்த வேண்டும் என்ற, வேகமும் தேடலும் அவரை நாட்டுப்புறப் பாடகனாக்கியது.

தமிழகத்தில் சினிமாவைப் போல, மேடைக் கச்சேரிகளுக்கு கேரளாவில் எப்போதும் செல்வாக்கு உண்டு. கோவில் விழாக்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மேடைகளிலும் நாட்டுப்புறப் பாடகனாய் மிகக் குறைந்தளவில் அறியப்பட்ட மணி, கேரளம் அறிந்த பாடகராய் அறிமுகம் ஆனது பெரிய வெற்றிதான். ஒரு கச்சேரிக்கு சங்கர்மகாதேவன் வந்திருந்தார். அதில், இடையில் ஒரு பாடல் பாடும் வாய்ப்பு மணிக்குக் கிடைக்க, மொத்த ரசிகர்களையும் தன் பாடலால் கட்டிப் போட்டார் மணி. சங்கர்மகாதேவன் அன்றைக்கு இரண்டாம்பட்சம் ஆகிவிட்டார்.

“ஓடண்டா, ஓடண்டா ஓமனப் பூமகம்” என்று, மணி பாடத் துவங்கினால் கூட்டமே ஆடியது அவரோடு. எங்காவது கச்சேரி நடந்தால் அது கலாபவன் மணிக்கென தனி விலை நிர்ணயம் செய்யும் அளவுக்கு கறுப்பனுக்கு செல்வாக்கு ஏறியது. அங்கிருந்துதான் அவரது திரையுலகப் பயணமும் தொடங்கியது.பள்ளிக்காலத்தில் வறுமையான சூழலில் நல்ல உணவோ, உடுத்த நல்ல உடையோ இல்லை. கட்டையான குரலும், நாட்டுப்புறப் பாடல்களை உள்வாங்கிப் பாடும் திறமையும் மட்டுமே மணியிடம் இருந்தது. அருட்தந்தை ஆபேல், கலாபவன் என்ற மிமிக்ரி அமைப்பை உருவாக்கினார். மணியை தன் குழுவோடு இணைத்துக்கொண்ட ஆபேல்தான், மணிக்கு பரவலாக அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தார்.

அதனால்தான் தன் பெயருக்கு முன்னே கலாபவன் என்று இணைத்துக் கொண்டார். மேடைகளைக் கடந்து சினிமாவுக்குள் செல்ல வேண்டும் என்ற கனவு, சாலக்குடி புழாவோடு கரைந்து விடாமல் இருக்க இதுவே காரணமாக அமைந்தது. சாலக்குடி பகுதியில் யாராவது ஷூட்டிங் வந்தால் அவர்களுக்கு உதவிகள் செய்வதும், வாய்ப்புகள் தேடுவதும்தான் மணியின் வேலை. மேடையில் நிரூபித்த தன்னை, சினிமாவில் நிரூபிக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவர் பாடல்களைப் பாடினார். எத்தனையோ தமிழ் சினிமாக்களின் படப்பிடிப்பு சாலக்குடியில் நடந்தபோதும் மணியை, தமிழ் சினிமாவில் எவரும் அடையாளம் காணவில்லை. கலாபவன் அமைப்பில் தன் சக கலைஞர்களான திலீப், ஜெயராம், சித்திக்லால் ஆகியோர் சினிமாவுக்குள் பிரவேசித்தபோதிலும் மணியால் சினிமாவுக்குள் நெருங்க முடியவில்லை. ஒரு ஆட்டோ ஓட்டியாக தன் வாழ்க்கையைக் கழித்தார். மீதி நேரம் கச்சேரிகளில் பாடினார். வாழ்க்கை அப்படியே கழிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாகப் போராடினார்.

இயக்குநர் சிபிமலயில் இயக்கிய ‘அட்சரம்’ படத்தில் ஆட்டோ ஓட்டுநராகவே அறிமுகம் ஆனார். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தப் படம் ஓடவில்லை. திலீப், மஞ்சுவாரியார் நடித்த ‘சல்லாபம்’ படம்தான் மணிக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியது. பின்னர்தான், வினயன் இயக்கிய ’வாசந்தியும் லஷ்மியும் பின்னே ஞானும்’ படத்தின்வழியாக தென்னிந்திய சினிமாவே, மணியை திரும்பிப் பார்த்தது. அடுத்த படமும் ‘கருமாடிக் குட்டன்’ அதுவும் ஹிட். இரண்டே படங்கள்தான். மணி மலையாள சினிமாவின் உச்சம் தொட்டார்.

கருமாடிக்குட்டன் படத்தை இயக்கிய வினயன், மணி பற்றி சொல்லும்போது “நாம் எப்போதும் மனநலம் குன்றியவர்களின் மனதையும், அவர்களின் துக்கங்களையும் உணர முயற்சிப்பதில்லை. அவர்கள் அன்புக்கு எப்போதும் ஏங்குபவர்கள். அவர்களிடம் காண்பிக்கப்படும் சிறு அளவிலான அன்புகூட அவர்களை மகிழ்ச்சியின் உச்சங்களுக்கு அழைத்துச் செல்லும். அதைத்தான் கலாபவன் மணியின் மூலமாக இப்படத்தில் நான் கொடுத்துள்ளேன்” என்றார். அதுதான் மணியின் இயல்பு.

1999ம் ஆண்டு, வாசந்தியும் லஷ்மியும் பின்னே ஞானும் வெளியானபோது, மொத்த மலையாள சினிமாவும் ‘மணிக்கு இந்த வருடம் தேசிய விருது கிடைக்கும்’ என்று பேசினார்கள். ஆனால், அந்த வருடம் வெளியான ‘வானப்பிரஸ்தம்’ படத்துக்காக, மோகன்லாலுக்குத்தான் தேசிய விருது கிடைத்தது. ‘‘எங்கிருந்தோ வந்த குட்டன் லாலைக் குடைந்துவிட்டான்” என்றெல்லாம் பேசினார்கள்.

பின்னர்தான், அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, என மூன்று மொழிகளில் நடித்தார். இரண்டு விஷயங்களை கலாபவன் மணி கடைசிவரை விடவில்லை. ஒன்று, மது. இன்னொன்று, நண்பர்கள். இரண்டுமே அவரது இருண்மையான இளம் வயது வாழ்வின் மிச்சங்களாக அவரோடு இருந்திருக்கக் கூடும். புழா தீரத்தில் அவருடைய வீட்டை பெரிதாக மாற்றினார். வீட்டின் அருகிலேயே நண்பர்களோடு செலவிட ஒரு கூடாரம். அவர் உயிர் பிரிந்தது மருத்துவமனையில் என்றாலும்கூட இறுதியாக, நண்பர்களோடு இருந்தது அந்த வீட்டில்தான்.

கருப்பன் கடைசிவரை, தான் வந்த சாலக்குடி புழாவையும், நண்பர்களையும் விடவில்லை. இந்த தேர்தலில் சிபிஎம் அவரை, தன் கட்சி வேட்பாளராக களமிறக்கத் திட்டமிட்டிருந்தது. அநேகமாக அவர், தனித் தொகுதியாக குன்னத்து நாடு தொகுதியில் போட்டியிட கட்சி விரும்பியிருக்கலாம். சிபிஎம் தயாரித்திருந்த வேட்பாளர் பட்டியலில் அவர் பெயரும் இருந்தது. காரணம், அவர் அச்சுதானந்தனின் செல்லப்பிள்ளை.

சினிமாவில் பிரபலமாகும்வரை சிகப்புத் துணி தோளிலும், பிரபலமான பின்பு சிகப்பை நெஞ்சிலும் ஏந்திய அந்த கருத்தகுட்டனின் பெயரை எவர் நினைத்தும் அழித்துவிட முடியாது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *