Eநெஹ்ராவின் சாதனைப் பயணம்!

public

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்று (நவம்பர் 1) டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்தப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. பின்னர் சவாலான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய வீரர்கள், நியூசிலாந்தை வீழ்த்தி நெஹ்ராவிற்கு வெற்றியுடன் பிரியா விடை கொடுத்தனர்.

போட்டியின் முன்பு நடைபெற்ற பயிற்சியின் போது கேப்டன் கோலி, தோனி ஆகியோர் அணியின் சார்பில் நெஹ்ராவுக்கு நினைவுப் பரிசு வழங்கினர். டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானம், நெஹ்ராவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக நேற்று ஒருநாள் மட்டும் தனது ஒரு கேலரிக்கு `நெஹ்ரா எண்ட்’ என்று பெயர் சூட்டிக் கௌரவித்தது.

ஆட்டம் முடிந்த பிறகு அணி வீரர்களுடன் நெஹ்ரா மைதானத்தை வலம் வந்தார். கடைசித் தருணங்களில் வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். கோலியும் தவனும் நெஹ்ராவை தங்கள் தோளில் சுமந்துகொண்டு மைதானத்தை வலம் வந்தார்கள். ஆட்டம் முடிந்தபிறகு எந்த ஒரு ரசிகரும் வெளியேறாமல், அனைவரும் தங்கள் செல்போன்களில் நெஹ்ராவின் கடைசித் தருணங்களைப் பதிவு செய்து கொண்டார்கள்.

நெஹ்ரா, 1999ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் முதன் முறையாக சர்வதேசப் போட்டியில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் 2001ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்திலும், டி20 போட்டிகளில் 2009ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் முதன் முறையாகக் களமிறங்கினார்.

இதுவரை 18 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்கையில் பயணித்த நெஹ்ரா, 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளும், 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 157விக்கெட்டுகளும், 27 டி20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். காயம் காரணமாக அடிக்கடி அணியில் இருந்து விலகினாலும், முழு உடற்தகுதியுடன் மீண்டும் அணிக்குத் திரும்புவது இவரது மன உறுதிக்கு எடுத்துக்காட்டாகும்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *