Hஅரசின் சேவைகளுக்கு லஞ்சம்!

Published On:

| By Balaji

குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட அரசின் சேவைகளையும் லஞ்சம் கொடுத்துதான் பெற வேண்டிய நிலை உள்ளது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். அதில்,” ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையால் முடக்கப்பட்ட 48 லட்சம் ரூபாய், நிலம் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்தது. அதில் ஊழல் இல்லை. அதனால், அந்த தொகையை விடுவிக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று(மார்ச் 20) நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, சொத்து முடக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை முடிவடையாமல் வழக்கு நிலுவையில் உள்ளதால், சொத்துகளை விடுவிக்க உத்தரவிடக் கூடாது என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை முடக்கிய 48 லட்சம் ரூபாயை விடுவிக்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருப்பது, ஊழல் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே வீழ்த்திவிடும். இது துரதிருஷ்டவசமானது . மேலும், இது குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பிக்கவும் வழிவகுத்துவிடும் என்று கூறிய நீதிபதி, ஊழல் வழக்குகளில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

அரசின் சேவைகளை லஞ்சம் கொடுத்துதான் பெற வேண்டும் என்ற நிலை வேதனை அளிக்கிறது. ஊழலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share