வேலுமணிக்கும் விஜயபாஸ்கருக்கும் போட்டி: எதில்?

Published On:

| By Balaji

கொரானோ வைரஸின் தாக்கம் அண்டை மாநிலங்களில் கடுமையாக எதிரொலித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இதற்காக எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒருபக்கம் தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்க இன்னொரு பக்கம் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட மாநகராட்சிப் பகுதிகளிலும், மாநகராட்சி மருத்துவ மனைகளிலும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து, ‘பிளீச்சிங் பவுடர்’ தூவும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் இப்பணிகளை தினந்தோறும் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

கொரானோ நோய்த்தொற்று பரவாமல் இருக்க பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள், மருத்துவமனைகள், வங்கி ஏடிஎம்கள் என மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளால் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும் கோவை முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாநகராட்சியால் பிரத்தியேகமாக பணி அமர்த்தப்பட்டுள்ள 800 நபர்கள் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை தூவி நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் டிஜிட்டல் பலகைகள் வாயிலாக ஒரு நிமிட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வீடியோ திரையிடப்பட்டு கோவை மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இத்தகவல்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினோம்.

“டெங்கு வந்தபோதே கொசு கடிக்கும் வரை அது மாநகராட்சி வசம் இருக்கிறது. கொசு கடித்த பிறகுதான் அது சுகாதாரத்துறைக்கு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேடிக்கையாக சொன்னார். ஆனால் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராகத்தான் அவ்வாறு பேசினார் என்று சிலர் கருதினர்.

இப்போதும் அப்படிப்பட்ட நிலைமை வந்துவிடக் கூடாது என்று வேலுமணி அனைத்து மாநகராட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். மாநில சுகாதாரத்துறையை மிஞ்சும் அளவுக்கு உள்ளாட்சித் துறையும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்” என்கிறார்கள்.

உத்தரவிட்டதோடு நின்றுவிடாமல் இரு அமைச்சர்களும் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள். அமைச்சர்களுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவி வருவதாகவே ஊடகங்களில் தகவல்கள் வரும் நிலையில், இப்படி ஆரோக்கியமான போட்டி நிலவினால் மக்களுக்கு நல்லதுதான்.

**-வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share