தடுப்பூசி இயக்கத்தில் இன்று முக்கியமான நாள்: பிரதமர் ட்வீட்!

public

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி இயக்கம் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மார்ச் 16ஆம் தேதி நாட்டில் உள்ள 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார்.

அதன்படி, நாடு முழுவதும் இன்று(மார்ச் 16) காலை முதல் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கார்பிவேக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று ட்விட்டரில், “நமது குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் இன்று முக்கியமான நாள். இப்போது முதல், 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸ்களுக்குத் தகுதியுடையவர்கள். இந்த வயதினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நமது குடிமக்களைப் பாதுகாக்கவும், தொற்றுநோய்க்கு எதிரான எங்கள் போராட்டத்தை வலுப்படுத்தவும், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியைத் தொடங்கினோம். நமது விஞ்ஞானிகளும், கண்டுபிடிப்பாளர்களும், தனியார் துறையினரும் இந்தச் சந்தர்ப்பத்தில் உயர்ந்து நிற்கும் விதம் பாராட்டுக்குரியது. மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். அதனால் இங்குள்ள மக்கள் தடுப்பூசியை எடுத்துக் கொள்வது மட்டுமில்லாமல், மற்றவர்களையும் தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தினர். இதை பார்க்க இதமாக இருந்தது.

தற்போது, 180 கோடிக்கும் மேற்பட்ட தவணைகள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 15 – 17 வயதுடையோருக்கு 9 கோடி மற்றும் 2 கோடி பூஸ்டர் தடுப்பூசிகள் அடங்கும். இது கொரோனாவுக்கு எதிரான முக்கியமான பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் இந்தியாவில் ‘தடுப்பூசி இயக்கம்’ அறிவியல் சார்ந்தது. இது மக்கள் சக்தியால் வெற்றி பெற்றது.” என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, “இந்தியா 12-14 வயதுடையவர்களுக்கான கோவிட் தடுப்பூசி பணியை இன்று தொடங்குகிறது என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 180 கோடி டோஸ்கள் மூலம், தடுப்பூசி இயக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவு வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள், எங்கள் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *