டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவின் கோபமும் எடப்பாடியின் பதிலும்!

public

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக இருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக். லொக்கேஷன் டெல்லி காட்டியது.

“அமித்ஷாவின் சென்னை விசிட்தான் எடப்பாடி அரசு மீது இருக்கும் கோபத்தை பகிரங்கமாக வெளிக்காட்டியது. அமித் ஷாவின் கோபத்துக்கான காரணங்கள் பல சொல்லப்பட்டது. இப்போது டெல்லி வட்டாரத்தில் வேறு ஒரு காரணத்தையும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அதுவும் பிஜேபி வட்டாரத்தில் இருந்தே அது கசிய ஆரம்பித்துள்ளது.

‘இரண்டு வாரங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்கு உரிய தூதர் ஒருவர் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி சொன்னதாக சில விஷயங்களை அவர் அமித் ஷாவிடம் சொன்னார். ‘வரப் போற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில், திமுக, மதிமுக, இடது சாரிகள் ஒரு அணியாக போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட முடிவு செய்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள், பாமக, கமல் மற்றும், தினகரன் இன்னொரு அணியாக போட்டியிடத் திட்டமிட்டு வருகிறார்கள். எஞ்சி இருப்பது பிஜேபியும், ரஜினியும் மட்டும்தான். எப்படியும் பிஜேபி கூட்டணியில் ரஜினி வந்துவிடுவார்.

அதே கூட்டணியில் அதிமுகவும் சேருவது என்பது சரியாக இருக்காது. அம்மா காலத்திலிருந்தே ரஜினிக்கு அதிமுகவையும், அதிமுகவுக்கு ரஜினியையும் பிடிக்காது என்பது போன்ற எண்ணம் இருக்கிறது. ரஜினியோடு அதிமுக கைகோர்க்க முடியாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம், அதிமுகவை இயக்குவதே பிஜேபிதான்… அதிமுகவின் தலைவர் மோடிதான் என்றெல்லாம் தமிழகத்தில் கிண்டல் செய்துவருகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை பிஜேபி மீது மக்கள் மத்தியில் ஒருவிதமான வெறுப்புணர்வு இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. அப்படிப்பட்ட நிலையில் உங்களோடு நாங்களும் கூட்டணி சேர்ந்து களமிறங்கினால், மக்கள் கோபத்துக்கு ஆளாவோம்.

தமிழ்நாட்டில் நாங்கள் ஒரு சர்வே எடுத்தோம். அதில் பிஜேபியுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் ஒரு இடத்தில்கூட ஜெயிக்க முடியாது என்றே சொல்லப்பட்டது. அதனால் வரப் போகும் தேர்தலில் நாம் கூட்டணி சேராமல் இருப்பதுதான் நம் இருவருக்குமே நல்லது. தனித்துப் போட்டியிட்டால் 40 இடங்களிலும் நாங்க ஜெயிக்க முடியாது என்பது தெரியும். தமிழகத்தில் எப்படியும் தனித்து நின்றாலும் 25 இடங்களில் எங்களால் ஜெயிக்க முடியும். அப்படி ஜெயித்த பிறகு நாங்கள் உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம். இப்போதே நாம கூட்டணி வைத்துதான் ஆக வேண்டும் என நினைத்தால், நீங்களும் ஜெயிக்க முடியாது. நாங்களும் ஜெயிக்க முடியாது. எங்களோட கணக்குப்படி ரஜினியோடு பிஜேபி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டால் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் ஜெயிக்கலாம். அப்படி ஜெயித்தாலே அது பெரிய விஷயம்தான். அதுவே நாம் எல்லோரும் சேர்ந்து நின்றால் அதுகூட ஜெயிக்க முடியாது.

அதனால் கூட்டணி தொடர்பாக இனி பேசாமல் இருப்பதுதான் நல்லது. தமிழகத்தில் பிஜேபி வளர்ச்சியை நாங்கள் எந்த சூழ்நிலையிலும் தடுக்கவில்லை. உங்கள் கட்சியை வளர்க்க நீங்க என்ன செய்யணுமோ செய்யுங்க. அதே நேரத்தில் எங்கள் கட்சி உங்களால் வீழ்ச்சி அடைந்துவிடக் கூடாது. தனித்து நின்று நாங்க ஜெயித்தாலும் அது உங்களுக்கான வெற்றிதான். உங்களுக்குதான் ஆதரவுக்கரம் நீட்டப் போகிறோம். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதல்வர் இந்த விஷயங்களை நேரடியாக உங்களிடம் பேச தயங்குகிறார். அதனால்தான் என்னிடம் சொல்லி அனுப்பினார். கூட்டணி இல்லையே தவிர, உங்களை எந்தச் சூழ்நிலையிலும் எதிர்த்துச் செயல்படும் எண்ணமோ திட்டமோ அதிமுகவுக்கு இல்லை..’ என்று சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்டதும் அமித் ஷா கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாராம். ‘உங்களை நம்பி எந்த காலத்திலும் நாங்க இல்லை. எங்களை நம்பித்தான் நீங்க இருக்கீங்க. இப்போ தமிழ்நாட்டில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கணுமா வேண்டாமா என்பதே நாங்க எடுக்கும் முடிவுதான். அவரு இவ்வளவு நாள் முதல்வராக இருப்பதே எங்கள் தயவில்தான் என்பதை மறந்துட்டு பேசியிருக்காரு. எங்களோடு கூட்டணி வைத்தால் ஜெயிக்க முடியாதுன்னு எந்த தைரியத்தில் சொல்றீங்க? இனி நீங்களே கேட்டாலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பிஜேபிக்கு விருப்பம் இல்லை. தமிழ்நாட்டு எலெக்‌ஷனை எப்படி சமாளிக்கணும்… எப்படி ஜெயிக்கணும் என்பது எங்களுக்கு தெரியும். உங்களை விட ஒரு சீட்டாவது தமிழ்நாட்டில் நாங்க அதிகமாக ஜெயித்துக் காட்டுறோம். யாரோட கூட்டணி வைக்கணும்.. யாரை கழட்டி விடணும் என்பதை நாங்கதான் முடிவு செய்யணும். அதை நீங்க எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

இந்த மீட்டிங்கிற்கு பிறகுதான் அமித் ஷா சென்னைக்கு வந்தார். தமிழகத்தில் ஆட்சி அமைத்தே தீருவோம் என்றெல்லாம் கொந்தளித்தார். அமித் ஷா கோபப்பட்ட தகவலை முதல்வர் எடப்பாடியிடமும் சொன்னார்களாம். ‘எப்படி இருந்தாலும் சொல்லித்தானே ஆகணும். அவரு கோபப்பட்டாருன்னு பார்த்தால் நாம இந்த எலெக்‌ஷனோடு வீட்டுக்குப் போக வேண்டியதுதான்’ என்று கமெண்ட் அடித்திருக்கிறார் எடப்பாடி. ‘பிஜேபியை இனி மெல்ல அட்டாக் செய்து பேசுங்க…’ என அதிமுகவினருக்கு வாய்மொழி உத்தரவு போயிருக்கிறது. இனி பாஜகவுக்கு எதிரான அதிரடிகளை அதிமுகவில் இருந்து எதிர்பார்க்கலாம்” என்று முடிந்தது ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *