டிஜிட்டல் திண்ணை: பாஜக விரும்பும் தொகுதிகள்! எடப்பாடி ஷாக்!

public

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.

“அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்கிறது. கூட்டணி தொடர்பாக விவாதிக்கவே இந்த கூட்டம். பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையே தவிர, அது உறுதியாகிவிட்டது. எந்த தொகுதி பாஜகவுக்கு போகும் என்பது தெரியவில்லை. இதற்கிடையில் டெல்லியில் இருந்து பாஜகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் எடப்பாடியுடன் பேசியிருக்கிறார்.

‘எத்தனை சீட் நாங்க எடுத்துக்குவோம் என்பதை அப்புறமாக பேசிட்டு முடிவு பண்ணிக்கலாம். தமிழ்நாடு முழுக்க எங்க டீம் சுற்றி வந்து ஒரு சர்வே எடுத்திருக்காங்க. அதில் எங்களுக்கு ரொம்பவும் ஸ்டிராங்கா இருக்கும் தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்திருக்காங்க. அதில், கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய எட்டு தொகுதிகளில் எங்களுக்கான செல்வாக்கு அதிகம் இருக்கு. அதனால அந்த தொகுதிகளைப் பற்றி நீங்க யாருக்கும் எந்த கமிட்மெண்ட்டும் கொடுக்க வேண்டாம். நாங்க கொஞ்சம் டிஸ்கசன் பண்ணிட்டு சொல்றோம்.

அதேபோல சட்டமன்றத் தொகுதிகளை பொறுத்தவரை இருக்கும் 22 தொகுதிகளில் 3 அல்லது 4 தொகுதிகளில் எங்களோட பங்களிப்பு இருக்கணும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிஜேபி எம்.எல்.ஏக்களும் இருக்கணும்னு இங்கே எல்லோரும் நினைக்கிறாங்க. அதில் நிலக்கோட்டை, சாத்தூர், திருப்போரூர் ஆகிய மூன்று தொகுதிகளில் எங்களுக்கான செல்வாக்கு அதிகம் இருப்பதாக சர்வே ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. அதையும் மனதில்வைத்து செயல்படுங்க…’ என்று சொல்லியிருக்கிறார்.

அதைக் கேட்ட எடப்பாடி கொஞ்சம் ஜர்க் ஆகிவிட்டாராம். ‘கூட்டணி பேச்சுவார்த்தை என வரும்போது, தொகுதிகளைக் கேட்பது நடைமுறைதான். ஆனால், நீங்க கேட்டிருக்கும் பல தொகுதிகள் அதிமுகவின் கோட்டை. அங்கே பிஜேபி நின்றால் கட்சிக்காரங்க கோபமாகிடுவாங்க. தேர்தலில் நமக்கு வேலை பார்ப்பாங்களான்னே சொல்ல முடியாது. அதனால இந்த முடிவை நான் மட்டும் எடுக்க முடியாது. உங்களோட தேவைகள் எல்லாவற்றையும் நீங்க சொல்லிட்டீங்க. இதை நான் கட்சிக்குள் பேசிட்டு முடிவு பண்ணி சொல்றேன்.’ என்று சொன்னாராம். பாஜகவின் விருப்பத்தையும் கேட்ட தொகுதிகளைப் பற்றியும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசத் திட்டமிட்டுள்ளார் எடப்பாடி.

எம்.பி. தொகுதிகள் கேட்டதைப் பற்றி கூட எடப்பாடி எதுவும் யோசிக்கவில்லையாம். ஆனால், சட்டமன்ற தொகுதிகளையும் பிஜேபி கேட்டதில்தான் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறாராம். ‘அவங்க சொன்னால் நாம கேட்போம் என்பதற்காக என்ன வேணும்னாலும் கேட்பாங்களா? நாம இல்லாமல் அவங்களால் தமிழ்நாட்டில் ஒரு சீட் ஜெயிக்க முடியுமா?’ என்று தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம் வெளிப்படையாகவே சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“வருத்தப்பட மட்டும்தானே முடியும். எடப்பாடியால் வேறு என்ன செய்ய முடியும்?” என்று கமெண்ட் அடித்து விட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *