ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு: தர்மபுரியில் மட்டும் தடையா?

public

பொங்கல் திருநாளை ஒட்டி மதுரை மாவட்டத்தில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை வெகு சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று தர்மபுரி மாவட்ட செய்தித் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ பொங்கல் விழா மற்றும் எதிர் வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு, எருதுவிடுதல், மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்வுகள் நடத்துவதற்கு அரசு அனுமதிபெற்று அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னர், அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசிதழ் ஆணையில் தர்மபுரி மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிரும் விழா நடத்த எந்த ஒரு இடத்திலும் அனுமதி பெறப்படவில்லை.

எனவே தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா என எதுவும் நடத்தக் கூடாது என்று பொதுமக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ள அந்த அறிவிப்பில், :”கோயில் திருவிழா, பாரம்பரிய நிகழ்வு என்று சொல்லிக் கொண்டு மேற்கண்ட நிகழ்வுகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.சேவல் சண்டை, ரேக்ளா ரேஸ் போன்றவையும் நடத்தக் கூடாது” என்று கூறியிருக்கிறார் கலெக்டர்.

இது தர்மபுரி மாவட்டத்தில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டர் அறிவிப்புக்கு எதிர்வினை ஆற்றியிருக்கும் தர்மபுரி எம்.பியும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி,

“ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த இடங்களில் நடத்துவது என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்கு மாநில அரசின் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியிட்ட பிறகு தான் போட்டிகளை நடத்த முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் எந்த இடத்திலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில் தர்மபுரி மாவட்டத்தின் பெயர் இடம்பெறவில்லை என்பது உண்மை தான். இது அறியாமல் நடந்த தவறா அல்லது திட்டமிட்டு இழைக்கப்படும் துரோகமா? என்பது தெரியவில்லை. ஜல்லிக்கட்டு குறித்த அரசிதழில் தருமபுரி மாவட்டத்தின் பெயர் இடம்பெறவில்லை என்றால், முதலமைச்சரையோ அல்லது தலைமைச் செயலாளரையோ அணுகி மாவட்டத்தின் பெயரைச் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து மக்களின் ஜல்லிக்கட்டு ஆசைக்கு முட்டுக்கட்டைப் போடுவதும், கோவில் திருவிழாக்களில் கூட இத்தகைய நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்று கூறி மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதும் சரியல்ல. இது எதிர்மறை விளைவுகளை அதிகமாக ஏற்படுத்தும்.

இவ்வாறு போராடிப் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் உரிமையை தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் பயன்படுத்த தமிழக அரசு தடை போடுவதன் நோக்கம் புரியவில்லை. தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க நியாயமான காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் போன்ற இடங்களில் நடக்கும் அளவுக்கு பிரமாண்டமாக தருமபுரி மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. ஆனாலும், கோவில் திருவிழாக்களின் ஓர் அங்கமாகவும், உள்ளூர் அளவிலான சிறிய போட்டிகள் வடிவத்திலும் மிக அதிக எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடும் போட்டிகள் நடத்தப்படும். அவற்றைத் தடை செய்வது திருவிழாக்களுக்கு உரிய உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் பறித்து விடும். எனவே, தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தர்மபுரியைச் சேர்ந்தவரும் மறுமலர்ச்சி ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவருமான ஜெயக்குமாரிடம் இதுபற்றிப் பேசியபோது,

“பொதுவாக தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுகள் பெரிய அளவில் நடத்தப்படுவதில்லை. மக்கள் நேசிக்கும் மாடுகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக மாடுகளை அலங்கரித்து கோயில்களைச் சுற்றி கூட்டிவந்து விழாவாகக் கொண்டாடுவார்கள். இதைக் கூட தடை செய்வது என்றால், அது தமிழர் பண்பாட்டை அழிப்பதற்கான தொடக்கமாகவே இருக்கும். அதுவும் கோயில் திருவிழா, பாரம்பரியம் என்று சொல்லி நடத்தக் கூடாது என்றும் கலெக்டரின் அறிவிப்பில் குறிப்பிட்டிருப்பது கண்டிக்கத் தக்கது. இதன் பின்னால் ஏதோ ஒரு பெரிய சக்தி இருக்கிறது. உடனடியாக மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் கலெக்டரை சந்தித்து இந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்துவோம்” என்றார்.

இதற்கிடையில் தர்மபுரியில் எருதாட்டம் நடத்த தடை ஏதும் இல்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *