கேளுங்க கேளுங்க… கேள்வி கேளுங்க! – காம்கேர் கே.புவனேஸ்வரி

public

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? – 41

கல்வி என்பதே கேள்வி கேட்க வைப்பதுதான். பதில் சொல்ல வைப்பதல்ல. என்ன, எப்படி, ஏன், எவ்வாறு, எங்கு என்ற கேள்விகளின் அடிப்படையில்தான் ஆராய்ச்சிகள் உருவாகின்றன. ஆராய்ச்சிகள்தான் கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகின்றன.

மாணவர்களைக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வைக்கிற மனப்பாடத் திறமையைத்தான் வளர்க்கிற கல்வி முறைதான் இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது. மனப்பாடமாகப் பதில் சொல்வது ஒரு திறமையே. அதுவே அறிவாற்றல் அல்ல.

நன்றாக மனப்பாடம் செய்யும் திறமையைப் பெற்றிருக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். அவர்கள் பாடங்களை எந்த அளவுக்கு பிராக்டிகலாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதை கவனித்தால் அவர்களின் அறிவாற்றல் எந்த அளவில் உள்ளது எனப் புரிந்துவிடும்.

உதாரணத்துக்கு, எலெக்ட்ரிகல் துறை மாணவர்களுக்கு வீட்டில் ஃபியூஸ் போனால் மாற்றத் தெரியுமா எனக் கேட்டுப் பாருங்கள். அவர்களால் ஒரு பழுதான டியூப் லைட்டைக்கூடக் கழற்றிவிட்டுப் புதிதாக மாற்றத் தெரியாது. இந்த அளவில்தான் நம் கல்வி முறை உள்ளது.

ஒரு பள்ளியில் மாணவர்களுக்கான கருத்தரங்கில் +2 மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் வகுப்பில் யார் புத்திசாலி எனக் கேட்டேன். இந்தக் கேள்வியும் மாணவர்கள் கோணத்தில் பதிலைப் பெறுவதற்காகவே. அதற்கு அவர்கள் அனைவரும் ஒருமித்தக் குரலில் ஒரு மாணவனின் பெயரைச் சொன்னார்கள்.

ஏன் என காரணம் கேட்டேன். ‘அவன் நிறைய மார்க் வாங்குவான்… அதனால் அவன்தான் எங்கள் வகுப்பில் ஆசிரியர்களுக்கு செல்லப்பிள்ளை’ என்றார்கள்.

‘சரி… நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல் பார்க்கலாம்’ என ஒரு கேள்வி கேட்டேன் அந்த புத்திசாலி மாணவனிடம்.

‘ஓர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் புத்தாக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார்கள்… பணிபுரிபவர்கள் எப்படியெல்லாம் மகிழ்ச்சியோடு பணி புரியலாம், எப்படி குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்கலாம் என்பதுபோன்ற டிப்ஸ்களை சொல்லிக்கொடுப்பதோடு கொஞ்சம் டான்ஸ், பாட்டு என பொழுதுபோக்கு அம்சங்களையும் வைத்திருப்பார்கள்…’

இந்த விஷயத்தை நடைமுறை ஒப்பீட்டில் உதாரணத்துடன் சொல்ல முடியுமா என்றேன்.

அந்த மாணவன் யோசித்தபடி நின்றிருந்தான். அதற்குள் மற்ற மாணவர்கள் சலசலத்தார்கள். ஒரு மாணவன் கை உயர்த்த அவனிடம் பதில் கேட்டேன்.

‘கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட்போனுக்கும் அவ்வப்பொழுது சாஃப்ட்வேர் அப்டேட் செய்வதைப் போல ஆபீஸில் பணிபுரிபவர்களின் மனதுக்கும் அறிவை அப்டேட் செய்வதாகச் சொல்லலாமா மேம்’ என்று சொன்ன அந்த மாணவனின் பதிலில் அசந்துபோனேன். நான் கைதட்ட ஆரம்பிக்க மற்ற மாணவர்களும் உற்சாகத்துடன் கைதட்ட அந்த மாணவனின் முகம் பிரகாசமாகியது.

அந்த வகுப்பாசிரியரும் வியந்துபோனார்.

அவன் என்ன மதிப்பெண் எடுக்கிறான் எனக் கேட்டேன். 60 சதவிகிதம்தான் எடுக்கிறான் என்றார்.

அவனுக்கு நல்ல கற்பனை வளம் இருக்கிறது. இப்படிக் கேள்விகள் மூலம் கற்பனை வளத்தை ஊக்குவித்தாலே நல்ல மதிப்பெண் எடுப்பான். அதோடு மட்டுமில்லாமல் படிக்கின்ற பாடங்களை நீண்ட நாட்கள் நினைவில் வைத்துக்கொள்ள ஓர் அருமையான யுக்தியும்கூட.

அதற்கு ஆசிரியர்கள் பாடம் எடுக்கத் தயார் ஆகும்போதே அவர்கள் அந்தப் பாடத்தையே பல சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்துக் கேள்விகளாக்கி அதற்கான பதில்களை நடைமுறை ஒப்பீட்டு நிகழ்ச்சிகளை உதாரணமாக்கி பாடம் எடுக்க வேண்டும்.

ஒரே விஷயத்தை What, Where, When, Why, Who, How என வெவ்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து பாடம் எடுத்தால் வகுப்பெடுப்பதும் சுலபம். மாணவர்களுக்குப் புரிய வைப்பதும் சுலபம்.

இதே வழக்கத்தை மாணவர்கள் படிக்கும்போதும் பின்பற்றச் சொல்ல வேண்டும்.

குழந்தைகளைக் கவனியுங்கள். நாம் ஒரு விஷயத்தைச் செய்யச் சொன்னால் ஏன் செய்யணும், எதற்காகச் செய்யணும், இப்பவே செய்யணுமா என்று பல கேள்விகளை அடுக்குவார்கள்.

அவர்களுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லும் பெற்றோர்கள் கிடைத்தால் அவர்கள் வரம் பெற்ற குழந்தைகள்.

‘வாயை மூடு’ என்று மட்டம் தட்டும் பெற்றோரிடம் மாட்டும் குழந்தைகள் தங்கள் கிரியேட்டிவிடியை இழக்கிறார்கள். மதிப்பெண் வாங்கும் இயந்திரமாகிப் போகிறார்கள்.

பிள்ளைகளைக் கேள்விகள் கேட்க அனுமதித்து பதில் சொல்லும் பெற்றோர்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளுக்குத் தங்கள் சந்தேகங்களுக்கு விடை காண வேறு நபரை அணுகவோ அல்லது சுயமாகப் பரிசோதனை முயற்சியையோ செய்ய வேண்டிய அவசியம் இல்லாத சூழல் கிடைக்கும்.

இந்தச் சூழல் ஆரோக்கியமான மனநிலைக்கு வித்திடும்.

கற்போம்… கற்பிப்போம்!

[எதையும் எளிதாகப் படிக்க!](https://www.minnambalam.com/k/2019/04/01/12)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *