>கண்ணுக்குள் காதல் வேர்

public

வனமெல்லாம் செண்பகப்பூ 13 – ஆத்மார்த்தி

பாடல்கள் எழுதுவது கலை, வணிகம் இணையும் புள்ளிக்கான கோலம். மெட்டுக்குப் பாட்டெழுதுவது சிரமம். தமிழ்ச் சமூகம் பாடல்களைப் பாடியவாறே வாழப் பழகிக்கொண்டிருக்கிறது. இது ஒரு நாளில் நிகழ்ந்ததல்ல. இதைப் பழக்கித் தந்தது சினிமா. எப்படித் தேநீர் பிரியமும் காபி காதலும் இருவேறு ரசனைகளோ, அவ்வண்ணம்தான் சினிமா பாடல் மீது ரசிகனின் மயக்கமும். பாடல்களின் உள்ளேயும் காபியும் தேநீரும் நிச்சயமாக உண்டு.

என் பால்ய காலத்தில் நான் மனனம் செய்து பாடிய பலவும் நான் அவதரிப்பதற்கு முன்பே தோன்றிய பாடல் வரிகள்தான். ஏன் என்றே தெரியாமல் பல வரிகளின் பின்னால் ஓடித் தமிழ்க் கடலில் தேடிய திரவியம்தான் இந்த இசைப்பித்து. அப்போதெல்லாம், பாட்டுக் கேட்கப் பிடிக்காது என்று சொல்பவரை மன விலக்கம் செய்துவிடும் அளவுக்கு எல்லோருக்குமானதாகப் பாடல்கள் திகழ்ந்தன. இன்றைக்கு மெல்ல மெல்ல சினிமாவிலிருந்து பாடல் உரித்தெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஐந்து வருடங்களில் பாடல் வேறு, படம் வேறு என்றாகிவிடும் போலத் தோன்றுகிறது.

பாட்டென்றால் அதன் வரிதான் முதலில். வரிகளை முதன்மைப் படுத்தாமல் பாடல்களைப் பற்றிப் பேச முடியாது. கவிதை புகுந்ததும் இசை, பாடலாகக் கனிகிறது. பாடலற்ற இசை வார்த்தைகள் வந்து சேர்ந்ததும் பன்மடங்கு அழகு பெருகிப் பூக்கிறது. பாடலாசிரியர்களின் பணி பிரமிப்பிற்குரியது. பாடலின் ஒவ்வொரு வரியும் கதைத் தொடர்பு, சூழல் பிரதிபலிப்பு இவற்றோடு தனித்தனியே பகுத்தெடுத்து நோக்கினாலும் மின்னுகிற தங்க இழைகளாகவே கடுமையான தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளுக்கு அப்பால் ஒப்புக்கொள்ளப்படுகிற கலை வடிவம்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிறாற்போல் எழுதுவதெல்லாமும் பாடல்களல்ல. தகுதி உள்ளவை மாத்திரமே தப்பிப் பிழைக்கின்றன. மற்றவை காற்றில் திறந்து கிடக்கும் கற்பூரக் கலயம் போலாகிக் கரைகின்றன.

**ரசிகனைப் பித்தனாக்கிய புலவர்**

புலவர் புலமைப்பித்தன் எம்.ஜி.ஆரின் தளகர்த்தர். பயின்று தேறிய புலவர். திரைப்பாடல் சரித்திரத்தில் வண்ணம் மிகுந்து பொழியும் பக்கங்கள் புலவருடையவை. எம்.ஜி.ஆரின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர். எம்.ஜி.ஆருக்குப் புலவர் எழுதிய பாடல்கள் நீரில் கலந்தழியும் அலைகளைப் போலல்லாமல் தனித்து உறைகிற பவளப் பாறைகளாகவே ஒளிர்ந்தவை.

நான் யார் நான் யார் நீ யார், ஆயிரம் நிலவே வா, ஒன்றே குலமென்று பாடுவோம், இன்று சொர்க்கத்தின் திறப்புவிழா, இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவை, எங்கே அவள் என்றே மனம், ஓடி ஓடி உழைக்கணும், நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, பாடும்போது நான் தென்றல் காற்று, மேரா நாம் அப்துல் ரகுமான், பூமழை தூவி, இன்பமே உந்தன் பேர் பெண்மையோ, நீங்க நல்லா இருக்கணும் என்று பல பாடல்களைச் சுட்டலாம்.

இளையராஜா இசையிலும்கூடப் பல முத்தாரங்களைப் படைத்தார் புலவர். கல்யாணத் தேன் நிலா என்று ஆரம்பிக்கிற மௌனம் சம்மதம் படப் பாடல் அவற்றிலொன்று. நாயகன் படத்தில் நீ ஒரு காதல் சங்கீதம் இன்றளவும் மனங்களவுகிற ஒன்று. ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் உச்சி வகுந்தெடுத்து போன்றவை புலமை செப்பும்.

நான் தாயுமானவன் என்று தொடங்கும் தாம்பத்யம் ஒரு சங்கீதம் படத்தின் பாடல் எம்.எஸ்.வி. இசையில் புலவர் தந்த வைரம் என்றால் சங்கர் கணேஷ் இசையில் பட்டு வண்ண ரோசாவாம் வைடூரியம். எல்லா இசை மேதமைகளுடனும் இணை சேர்ந்து நெடுங்காலம் பாடல்கள் பயிர்செய்த புகழ் கணக்கு புலவருடையது. நானே ரசிகனாக அல்ல, பித்தனானேன் என்று சொல்லத் தக்க அளவில் புலவரின் பாடல்கள் மீது எனக்குப் பெருங்கால மயக்கம் உண்டு.

**இசையும் ஓசையும்**

இந்தியில் ஷோர் என்ற படத்தில் இடம்பெற்ற [ஏக் ப்யார் கா நக்மா ஹை](https://www.youtube.com/watch?v=ST_WC13rNJo) பாடல் எல்லை கடந்த வெற்றி வில்லை. சந்தோஷ் ஆனந்த் எழுதிய இதற்கு இசை லட்சுமிகாந்த் பியாரிலால். இதனைத் தமிழில் சங்கர் கணேஷ், ஓசை என்ற படத்தில் புலவரின் எழுத்தில் மீவுரு செய்தார்கள்.எஸ்.பி. பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம் இருவரும் குரலாக்கம் செய்தனர். இந்திப் பாடலின் ஆன்மாவை அப்படியே எடுத்துவந்து தமிழில் செறிவூட்டித் தந்தார் புலவர். இரண்டு பாடல்களின் அர்த்தம் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றாலும் அலங்காரமாய் எதைச் சொல்ல வேண்டும் அப்படியே எதை விட வேண்டும் என்பதைப் பேணிய வகையில் [தமிழில்](https://www.youtube.com/watch?v=CeTpT0x0J6E) ஒரு சிட்டிகை மென்மை கூடியது. நான் வாழ்வது உன்னாலே நீ காட்டிடும் அன்பாலே என் ஆயிரம் ஜென்மங்களும் உன் அன்பினை நான் கேட்பேன் என்ற வரிகள் கலங்காத உள்ளங்களையும் கலங்கச் செய்யும்.

**ஆத்தோரம் ஆலமரம்**

முதலாளி அம்மா எனும் படத்தில் சந்திரபோஸ் இசையில் புலவரின் பாடல் ஒன்று அந்தக் காலகட்டத்தில் விண்வரை ஏறி ஒலித்தது. இன்றளவும் கேட்டு ரசிக்கப் பல இதயங்களைத் தன் வசம் கொண்டது. இந்தப் [பாடலின்](https://www.youtube.com/watch?v=3TV–6DCbl4) சிறப்பு அலாதியானது. டி.எல்.மகராசன், எஸ்.பி.ஷைலஜா இணைந்து பாடினர். குரல்களோடு தானும் ஒரு குரலாய் இசை மாறி இருக்கும். இசைக்கோவைகளோடு இந்தக் குரல்கள் கரைந்திருக்கும்.

ஒரு பாடலின் வரிகள் ஒலிக்கும்போது நினைவாகக் கூடாது. மாறாகத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது காற்றில் திரை மீறித் தெரிகிற முகம்போலாக வேண்டும் எல்லாப் பாடல்களுக்கும் பொருந்தாது என்றாலும் சிறந்த பாடல் வகை ஒன்றின் இலக்கணம் இது.

ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்

நாளெல்லாம் ஆடுவமா… தெம்மாங்கு பாடுவமா

(ஆத்தோரம் ஆலமரம்)

அவள்:

பச்ச நெல்லு காத்தடிச்சாக்கா

அங்கும் இங்கும் தலையசைக்கும்

சின்னப் பய்யன் நீ சிரிச்சாக்கா

நெஞ்சம் எங்கும் அலையடிக்கும்

அவன்:

தண்ணிக்குள் வாழ மீனிருக்கும்

நெஞ்சுக்குள் ஆசை தேன் குடிக்கும்

அவள்:

கண்ணுக்குள் காதல் வேர்பிடிக்கும்

கட்டிலப் போட்டா தென்றல் வரும்

அவன்:

வானத்திலே வரும் மேகங்களே

பூமியிலே மழை தூவுங்களேன் (ஆத்தோரம்)

ஒரு பாடல் எப்போதுதான் தனித்துச் சுயவுருவாகிறதோ அப்போதுதான் காலம் கடப்பதற்கான அதிகாரம் அந்தப் பாடலைச் சென்று சேர்கிறது. அப்படியான பாடல் கேட்போரின் கவனம் வருடும், இதயம் திருடும். தொன்மம் கலந்தொலிக்கும் இந்தப் பாடலில் அப்படியான அடையாளங்கள் மிகுந்து ஒலிப்பது வெளிப்படை.

அவன்:

தொட்டாச்சிணுங்கி செடிகளைப் பார்த்தேன்

நீயும் அந்த சாதியடி

சும்மா ஒன்னை ஒருமுறை தொட்டேன்

கன்னிப் போச்சு மேனியடி

அவள்:

என்னவோ நீயும் தேடுறியே

எங்கெங்கோ என்னை பார்க்குறியே

அவன்:

கண்ணுல தீயை மூட்டுறியே

அம்மம்மா என்னை வாட்டுறியே

அவள்:

தேனெடுத்து அந்தத் தீயணைப்பேன்

தீயணைக்கும் என்னை நீயணைப்பே

ஆத்தோரம் ஆலமரம்

நாமாட ஊஞ்சல் தரும்.

யூகிக்கவே முடியாத இந்தப் பாடலின் செல்திசை இதன் முதல் வசீகரம். எந்த ஒரு சொல்லும் அறியாப் புதுச்சொல் அல்ல என்பது இதன் அடுத்த வசீகரம். காதல் இணையை நீ சின்னப் பையன் என்று உருவகிக்கும் காதல் களியாட்டத்துக்கான சொற்கள் இப்படித்தான் தேன் தடவினாற்போல் இனிக்க வேண்டும்; கரும்பைப்போல அது கனத்துவிடக் கூடாது. கருப்பட்டி போல் அது எளிய உருக்கொண்டிருக்க வேண்டும். இது அத்தனையும் புலவருக்கு அத்துப்படி என்பதைப் பறைசாற்றுகிறது மேற்காணும் பாடல். எளிமையை உருவாக்குவதுதான் கலையின் கடினம். மொழியில் எளிமையும் இனிமையும் சேர்கிற புள்ளிதான் யதார்த்தத்தின் உச்சம். வாழ்க புலவரின் புகழ்.

வாழ்க இசை!

[உள்ளம் காணும் கனவு என்ன?](https://minnambalam.com/k/2019/08/03/5)

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: முதல்வர் பதவி: பன்னீர் சபதம்- எடப்பாடி பீதி!](https://minnambalam.com/k/2019/08/15/63)**

**[நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!](https://minnambalam.com/k/2019/08/14/18)**

**[அமமுகவில் இணைந்த நடிகை!](https://minnambalam.com/k/2019/08/15/35)**

**[முப்படைகளின் தலைமை அதிகாரி! அத்வானி கனவை நனவாக்கிய மோடி](https://minnambalam.com/k/2019/08/15/20)**

**[கமல் கட்சியில் புதிய மாற்றம்!](https://minnambalam.com/k/2019/08/14/67)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *