மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!

நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!

முகேஷ் சுப்ரமணியம்

சமீபத்தில் வெளியான அஜித்-ஹெச்.வினோத்தின் நேர்கொண்ட பார்வை சமகால தமிழ் சூழலில் பல்வேறு விவாதங்களையும், நவீன பார்வைகளையும் அளித்து வருகின்றது.

இது ஆண்களுக்கான சினிமா

படைப்பின் நோக்கம், தேவை, உட்பொருள் ரீதியாக ‘நேர்கொண்ட பார்வை’ ஆண்களுக்காக எடுக்கப்பட்ட சினிமா என்றே சொல்லலாம். இங்கே ஆண்கள் தான் சினிமாவின் வியாபாரத்தை, நுகர்வை தீர்மானிக்கிறார்கள். இப்படத்தை வெற்றி பெற வைப்பதும், தோல்வி பெற வைப்பதும் கூட அவர்கள் கைகளில் தான் இருக்கிறது. வெற்றி தோல்விகளையும் கடந்து இதனை சமூக நகர்வாக மாற்றும் சக்தியும் அவர்களிடம் தான் இருக்கிறது. படத்தில் வரும் வசனம் போல ‘ நம்ம பசங்களத் தான் பாதுக்காக்கனும் பொண்ணுகள இல்ல. ஏன்னா நம்ம பசங்கள பாத்துக்கிட்டாலே போதும், பொண்ணுங்க தானா சேஃப் ஆயிடுவாங்க’.

அவர்களிடம் என்ன சிக்கல் என்றால் படத்தில் ரங்கராஜ் பாண்டே, ஆண்&பெண் காவல்துறை அதிகாரிகள் உதிர்க்கும் வன்மைத்தையும் உள்ளூர ரசிக்கிறார்கள், அஜித் ‘நோ மீன்ஸ் நோ’ எனும் போதும் சிலிர்க்கிறார்கள். டிவிட்டரில் ஒருவர் ‘அஜித்தின் ‘பஞ்ச்’ வசனமாக இது மாறாமல் இருந்தால் சரி’ எனக் கூறியது பொருத்தமாக இருக்கிறது. நமது சூழலில் இன்னும் நமது ரசிகர்கள் இப்படத்தை பார்ப்பதற்கு தயாராகவில்லை, பழக்கப்படவில்லை என்பது நிதர்சனமாக இருந்தாலும் அதற்கான முன்னெடுப்புகள் தமிழில் மிகக் குறைவே. அதே சமயம், இம்மாதிரியான படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் போது இதில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். அவ்வகையில், நேர்கொண்ட பார்வை ஒரு நல்ல தொடக்கமே.

நடுங்கும் நாயக பிம்பம்

பிங்க் திரைப்படத்தினை அப்படியே எடுத்திருந்தாலும் அஜித்துக்காக ஒரு முப்பது நிமிடங்களை சுதந்திரமாக கையாண்டிருக்கிறார் ஹெச். வினோத். படத்தில் அதிகம் ஒட்டாமலிருக்கும் காட்சிகள் என்றால் அது புதிதாக இணைத்துள்ள, அஜித்-வித்யா பாலனுடனான காதல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் தான்.

பிங்க் திரைப்படத்தில் தப்ஸி அமிதாப் முன்னாலேயே கடத்தப்படும் போது, அமிதாப்பால் ஒன்றும் செய்ய இயலாமல் அவசர போலீஸ், தெரிந்த காவல் துறை நண்பர்கள் ஆகியோருக்கு அழைத்து தப்ஸியை மீட்கப் போராடுவார். அவரால் தப்ஸியை ஆபத்தில் காப்பாற்ற முடியாமல் போன அந்தக் குற்றவுணர்ச்சியே தப்ஸிக்காக நீண்ட வருடங்கள் கழித்து வழக்கில் வாதாட வைக்கும்.

நேர்கொண்ட பார்வையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் கடத்தப்படும் போது அஜித்துக்கு பதில் அவரது உதவியாளர் தான் பார்ப்பார். அவர் பதட்டப்பட்டு காவல் துறைக்கு தொலைபேசியில் அழைக்கும் சமயத்தில் தான் அஜித்துக்கே இது தெரிய வரும். அஜித்தே ஷ்ரத்தா கடத்தப்படுவதை பார்க்கும் படி அமைத்திருந்தால் என்ன சிக்கல்? ஏன் அஜித் பார்க்கவில்லை? அஜித் மாதியான நாயகன் எப்படி ஒரு பெண் கடத்தப்படுவதை பார்த்தும் காப்பாற்றாமல் இருக்க முடியும். அவர் பரத் சுப்ரமணியம்(அஜித் கதாபாத்திர பெயர்) பாத்திரத்தில் நடித்தாலுமே திரையில் அஜித் தானே.

அஜித் ரசிகர்களுக்காக கதையில் மாற்றினோம் எனக் கூறினாலும், எழும் கேள்வி இது தான். ஆண்டாண்டு காலமாய் இறுகிக் கிடக்கும் வறட்டுத் தனமான ஆண் எனும் திமிரையே அசைக்கும் கருவை சொல்லப்போகிறீர்கள்? பிறகு, அஜித் ரசிகர்களுக்காக மட்டும் தயங்குவதில் என்ன நியாயம்?

தமிழ் சினிமாவின் வியாபார சிக்கலுக்குள் நாம் செல்ல வேண்டாம். ஆனால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பிங்கில் அமிதாப் 60, அஜித் இதில் 40 என சாக்கு போக்குகள் தான் ரசிக மனத்தை இன்னும் பழமை மாறாத ஒன்றாகவே வைத்திருக்கும்.

படத்தைப் பற்றி வரும் பெரும்பான்மையான பாராட்டுக்களும் புளித்துப் போன நாயக பிம்பத்தையே சுற்றி வருவது தான் இன்னும் அபத்தமாக இருக்கிறது. ‘இம்மாதியான படங்களில் அஜித் நாயகனாக நடித்தது வரவேற்கத்தக்கது’, ‘ஒரு மாஸ் ஹீரோ இதில் நடிக்கும் போது கோடிக்கணக்கான ரசிகர்களை கருத்து சென்றடையும், மாற்றம் உண்டாகும்’ போன்ற கருத்துக்கள் விமர்சகர்களாலும், பிரபலங்களாலும் அதிகம் முன்வைக்கப்பட்டன. வாஸ்தவம் தான்.

ஆனால்...நல்ல கருத்தை மாஸ் ஹீரோக்கள் மட்டுமே தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா? மாஸ் ஹீரோக்களிடமிருந்து மட்டும் தான் அவை உதிக்க வேண்டுமா? அப்படி சொன்னால் தான் கோடான கோடி ரசிகர்களும் கேட்பார்களா?

நேர்கொண்ட பார்வை என்றில்லை, சமூக கருத்துக்கள் கொண்ட பல மசாலா படங்களுக்கும் இதே விதமான வரவேற்புகள் தான் கிடைத்து வந்திருக்கின்றன. இது மிகவும் பிற்போக்குத்தனமான ஒன்றாகவே படுகின்றது. இதற்குப் பழக்கப்படுத்தப்பட்டால் இதனை இவர்கள் தான் சொல்ல வேண்டும், அப்போது தான் எடுபடும் என அனைத்தும் ஒரே இடத்தில் குவிமையமாகாதா? அறத்துக்கான பிராண்ட் அம்பாஸிடர்களா மாஸ் ஹீரோக்கள்?

தூதுவன் வருவன், மாரி பெய்யும் என்ற ஆயிரத்தில் ஒருவன் வசனம் தான் நியாபகத்திற்கு வருகின்றது. தமிழ் அரசியல் சூழலிலும் இதே விதமான நிலை தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட மூத்த தலைவர்களின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட நாயகனுக்கான (அல்லது மக்களை ஒருங்கினைக்கும் சக்திக்கு) வெற்றிடமே, அதே தலைவர்களை சாதி சங்கத் தலைவராக மாற்றியது. சினிமாவில் சாதி சங்கங்கள் ரசிகர் மன்றங்களாக வேறொரு வடிவத்தில் இருக்கின்றன.

விமர்சனங்கள், சமூக வலைதள எதிர்வினைகள்

பார்வையாளர்கள் சினிமாவை பார்க்கும் விதத்தை மாற்றக்கூடிய வல்லமையில் விமர்சகர்கள் இருந்தார்கள் என்பது சினிமா வரலாறு. கேஹியர்ஸ் து சினிமா என்ற பிரெஞ்சு கலை நாளிதழ் சினிமா குறித்த கட்டுரைகளையும், விமர்சனங்களையும் தொடர்ந்து வெளியிட்டு பார்வையாளர் கலாச்சாரத்தையும், பிரெஞ்சு புதிய அலையையும் தோற்றுவித்தது.

விமர்சனம் என்பது ஒரு தீவிரமான கலை செயல்பாடு. இன்றைய நிலையில், யூடியூப் விமர்சனங்கள் கேளிக்கைகாகவே அதிகம் பார்க்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. விமர்சனங்கள் நுகர்வுப் பொருள் சந்தையாக மாறி சினிமாவையும் சேர்ந்து சிதைக்கத் துவங்கியிருக்கிறது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு மேற்சொன்ன விஷங்களும் விமர்சனத்துக்குள் வந்து இருவிதமான கூறுகளில் வெளிப்பட்டன.

1. உச்சிமுகர்ந்து பாராட்டுவது.

2.இருப்பை தக்க வைக்க பாராட்டுவது போல பாவித்து, ஆணாதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துவது.

‘இந்த மாதிரி பெண்களுக்கு என்ன நடந்தா என்னனு தான் இருக்கு’ அதிகம் பார்க்கப்படும் யூடியூப் சானலில் ஒரு பிரபல விமர்சகர் கருத்து இது. இதற்கும் படத்தில் நாயகியை வன்புணர்வு செய்ய முயலும் அர்ஜூனின் வசனமுமான, ‘இந்த மாதிரி பொண்ணுகளுக்கு இப்படிதான் நடக்கும்’ என்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டின் பின்னணியும் ஒன்று தான், ஆண் எனும் திமிர். படத்தில் நடித்த பெண்கள் நீதிமன்றத்தில் என்னனென்ன தொல்லைகளை எல்லாம் சந்தித்தார்களோ அவற்றையே படம் முடிந்த பின்னும் பல ‘நீதிமன்றங்களில்’ சந்தித்தார்கள்.

விமர்சகர்கள் மத்தியில் படத்தில் சிக்கலாக தோன்றும் மற்றொரு முக்கியமான விஷயம்; கலாச்சார ரீதியாக படத்தில் ஒட்டமுடியவில்லை. சொல்லப்போனால், கதாபாத்திர ரீதியாக ஷ்ரத்தா, அபிராமி, ஆண்டிரியா மூவரும் நம்மிடம் பதியாமல் போனதால் ஏற்பட்ட பின்னடைவு இது. கதாபாத்திரமாக ஒட்ட முடியவில்லையே தவிர, இந்தி கலாச்சாரம்-தமிழ் கலாச்சாரம் என இவ்விஷயத்தில் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? இங்கும் கலாச்சாரக் காவலா?

கதாபாத்திரமாக ஒட்ட முடியாமல் போனது திரை மொழியின் சிக்கலே தவிர்த்து கலாச்சாரம் அல்ல. மீண்டும் ‘பிங்க்’ உடன் ஒரு சின்ன ஒப்பீடு. அப்படத்தின் ஆரம்ப நிமிடங்களிலேயே தப்ஸிக்கு ஏற்படும் சிக்கல் நமக்கும் உணர ஆரம்பித்து விடுகிறது. மாட்டவே கூடாத பிரச்சனையில் மாட்டிவிடுகிறோம், எப்படியாவது வெளியே வந்தால் போதும் இனி வாழ்க்கையில் வேறு இடரே இல்லை என சிக்கலான காலங்களில் மனம் எப்படி அடித்துக் கொள்ளுமோ அப்படி இருக்கும் பிங்க் ஆரம்ப காட்சிகள். குறிப்பாக தப்ஸியின் முகம் குழப்பத்தின் உச்சத்தில் முழித்துக் கொண்டிருக்கும்.

தப்ஸியை தொலைபேசியில் மிரட்டும் அர்ஜுனின் நண்பனிடம் தைரியமாக பேசிவிட்டு தப்ஸி சாலையை சுற்றும் முற்றும் பார்ப்பார். அவரது மனதில் என்ன ஓடுகின்றது என நம்மால் தெளிவாக உணர முடியும். சில விநாடிகள் என்றாலும் அந்த வசனமற்ற காட்சியை நுணுக்கமாக கையாண்டிருப்பார்கள். அந்த நுணுக்கமான திரைமொழி தான் நேர்கொண்ட பார்வை படத்தில் பெரிய மிஸ்ஸிங்.

தேவைப்படும் நேர்கொண்ட பார்வை

ஆண்களே சமூகக் கட்டமைப்பை பெரும்பாலும் உருவாக்குகிறார்கள், தீர்மானிக்கிறார்கள், வடிவமைக்கிறார்கள், ஆதாயம் பெருகிறார்கள். அவர்களே இப்படத்தை, இதன் பேசு பொருளை அடுத்தடுத்த காலங்களில் சுமக்கப் போகிறார்கள். நகரம் பெண்களின் சுயாதீனக் கனவுகளை சாத்தியமாக்கியிருக்கிறது, வீட்டிற்கு தினசரி உணவை கொண்டு வரும் சாத்தியத்தை உருவாக்கியிருக்கிறது, சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறது.

‘மாடர்ன் கேர்ள்ஸ்’ என்ற சொல்லின் பின்னுள்ள உடனடி தோற்ற பிம்பத்தை எது நம்மிடம் உருவாக்கியது? படித்த, ஆணுக்கு நிகரான வருமானத்தை பெறுகின்ற, அதிகாரம் செலுத்தக் கூடிய நிலையில் இருக்கிற பெண்கள் மீதான ஆண்களின் பார்வையை எது இன்னும் மாறாமல் வைத்திருக்கிறது?

ஆடை, வாகனம், மொபைல் போன்ற வளர்ச்சியையும் கடந்து நவீனமடைதலில்- நவீன‘மனமடைந்தால்’ நேர்கொண்ட பார்வை சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சாத்தியம்.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon