ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைப்பு!

politics

தேனி எம்.பி. ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இன்று காலை துணை முதல்வர் ஓபிஎஸ், பெரியகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, அம்மா பழனியம்மாள், மனைவி விஜயலட்சுமி, மகன் ஜெயபிரதீப், அவரது மனைவி ஆர்த்தி, தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி ஆகியோருடன் வந்து வாக்களித்துச் சென்றார்.

இதையடுத்து தேனி எம்.பி ரவீந்திரநாத் தனியாக வந்து வாக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து, வாக்குப்பதிவு நடைபெற்று வரும் இடங்களைத் ரவீந்திரநாத் பார்வையிட சென்றார். போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாளகவுண்பட்டி கிராமத்திற்குச் சென்ற போது அவர் கார் மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இதில் அவரது கார் கண்ணாடி முன்புறமும், பின்புறமும் பக்கவாட்டு பகுதியிலும் சேதமடைந்தது. இதனால் ரவீந்திரநாத்துடன் சென்ற அதிமுகவினருக்கும், கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இருவருக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ரவீந்திரநாத் எம்.பி.கூறுகையில், “அதிமுகவுக்குப் பெண்களும், பொதுமக்களுக்கும் வந்து வாக்களித்து வருகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுகவினர் மதுபோதையில் தாக்கியிருக்கின்றனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், இதற்கு திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், தேனி எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி, போடி டி.எஸ்பி. பார்த்திபன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ரவீந்திரநாத் காரை அடித்து நொறுக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *