dபடையப்பா ஸ்டைலில் ஸ்டாலின்: ஜி.கே.மணி

politics

முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலமா என்ற சர்ச்சையில் திமுகவுக்கும் பாமகவுக்கும் மீண்டும் அறிக்கை மோதல் ஆரம்பித்துள்ளது.

முரசொலி பஞ்சமி நிலமா என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் பாஜகவின் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் சில நாட்களுக்கு முன் முரசொலி தரப்பில், ‘முரசொலி டிரஸ்டின் அலுவலகம் அந்த இடத்தில் வாடகைக்குத்தான் செயல்பட்டு வருகிறது’ என்று சொல்லியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ், முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வெற்று சவடால்தானா?” என திமுகவைக் கடுமையாகத் தாக்கியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று (ஜனவரி 30) திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில்,

“பாட்டாளிகளுக்காக இயக்கம் என்று துவங்கி- வன்னியர் சங்க அறக்கட்டளையைத் தன் பெயருக்கே மாற்றிக் கொண்டதைப் போன்றது முரசொலி அலுவலக விவகாரம் என்று ராமதாஸ் பகல் கனவு கண்டு விட்டார் என்று கருதுகிறேன். அதனால்தான் பஞ்சமி நிலம் என்று வீண் பழி சுமத்தி முரசொலியின் மூலப்பத்திரம் கேட்டவருக்கு, முரசொலி பஞ்சமி நிலம் இல்லை என்பதற்கு ஆதாரமாக அதற்குறிய பட்டாவை வெளியிட்டோம்; முணுமுணுப்பே இல்லாமல் சில வாரங்கள் அமைதி காத்தார். இப்போது பழையபடி வாடகைக் கட்டிடம் என்று ஒரு புதிய பல்லவியை தொடங்கி- தி.மு.க.வை வம்புக்கு இழுக்கிறார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மருத்துவர் ராமதாசால் நிரூபிக்க முடியவில்லை. அவரைத் தூண்டிவிட்ட பா.ஜ.க.வாலும் நிரூபிக்க முடியவில்லை. தேசிய பட்டியலின-பழங்குடியின ஆணையம் சார்பில் நடைபெற்ற விசாரணைகளிலும் புகாரளித்தவர்கள் புறமுதுகிட்டு – காலஅவகாசம் கேட்டு கலைந்து சென்ற பிறகும் கூட- இத்தனை வருடங்களாக அரசியலில் இருக்கும் மருத்துவர் ராமதாஸ் தான் சொன்ன பொய்யை விழுங்கவும் முடியாமல்- நிரூபிக்கவும் முடியாமல் தவிக்கிறார். பஞ்சமி நிலத்திற்கான ஆதாரத்தை மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருந்தால் அவரது நேர்மையைப் பாராட்டியிருக்கலாம். இல்லையென்றால் தெரியாமல் தவறு செய்து விட்டேன் என்று மன்னிப்புக் கேட்டிருந்தால் அவரது பெருந்தன்மை என்று விட்டிருக்கலாம். ஆனால் இரண்டும் இல்லாமல்- நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டிய மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இப்போதும் கூட தனது தவறை உணருவதாகத் தெரியவில்லை என்றால்- யாருக்காக இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்? தி.மு.க.வை விமர்சித்தால் பா.ஜ.க. மகிழ்ச்சியடையும். தன் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதுள்ள மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு விசாரணை தடைபடும்; மத்திய அமைச்சரவையில் தன் மகன் இடம்பெற வாய்ப்பு ஏற்படும் என்ற நப்பாசை காரணமோ என்ற சந்தேகமே எழுந்திருக்கிறது

எழுப்பப்பட்ட பிரச்சனை முரசொலி இருக்கும் இடம், பஞ்சமி நிலமா அல்லவா என்பது தானே தவிர, முரசொலி அலுவலகம் அங்கு வாடகைக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல. முரசொலி சார்பில் பட்டாவை வெளியிட்டது முரசொலி இயங்கும் இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்கவும், பொய்யையே தனது அரசியலுக்கு அஸ்திவாரமாக்கி, பொய்யிலே வாழ்ந்து வரும் மருத்துவர் ராமதாஸின் பொய்” முகமூடியைக் கிழிப்பதற்காகவும் தான்.

முடிவாக இந்த சவடால் விடும் வேலைகளை தி.மு.கழகத்திடம் வைத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு, பஞ்சமி நிலம் என்று சொன்ன குற்றச்சாட்டிற்கு முடிந்தால் ஆதாரத்தைக் கொடுங்கள். அப்படி முடியாவிட்டால் தோல்வியை ஒப்புக் கொண்டு- சமூக நீதிக் குரலை தொடர்ந்து ஒலித்து வரும் முரசொலி நாளிதழ் பற்றி அபாண்டமாக பழி சுமத்தி விட்டோமே என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு பிராயச்சித்தம் தேடப் பாருங்கள்” என்று தெரிவித்திருந்ந்தார்.

இதற்கு இன்று (ஜனவரி 31) பதில் அளித்துள்ள பாமக தலைவர் ஜி.கே.மணி,

“முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிக்கப் போவதாக சவால் விடுத்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், முரசொலி அறக்கட்டளையும் இப்போது அந்த நிலமே தங்களுடையது அல்ல; அந்த நிலத்தில் முரசொலி அலுவலகம் வாடகைக்கு தான் இயங்குகிறது என்று தட்டிக்கழித்து விட்டு தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்க முடியாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போது புதிய பூசாரி ஒருவரை நியமித்து ஒன்றுக்கும் உதவாத வாதங்களை விளக்கங்களாக வழங்கச் செய்துள்ளார்.

முரசொலி இருக்கும் இடம், பஞ்சமி நிலமா அல்லவா என்பது தான் பிரச்சினை. முரசொலி இருக்குமிடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபியுங்கள், அதற்கான மூலப்பத்திரத்தை வெளியிடுங்கள் என்று தான் கேட்கிறோம். ஆனால், அதற்கு முரசொலி மற்றும் திமுக தரப்பிலிருந்து இன்று வரை பதில் இல்லை. ஆனால், இப்போது திடீரென ’மாப்பிள்ளை அவரு தான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது’ என்ற படையப்பா வசனத்திற்கு ஏற்ப, ‘முரசொலி எங்களுடையது தான். ஆனால், அது அமைந்துள்ள இடம் யாருக்கோ சொந்தமானது’ என சென்னை உயர்நீதிமன்றத்திலும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் கூறி, முரசொலி நிலம் யாருடையது என்பதை நிரூபிக்க வேண்டியது தங்கள் கடமை அல்ல என்று பின்வாங்கி ஓடுவது திமுகவும், முரசொலியும் தானே? சின்ன அண்ணா என்றும், தத்துவ மேதை என்றும் போற்றப்பட்ட டி.கே.சீனிவாசனின் புதல்வரால் இதைக் கூட புரிந்துகொள்ள முடியவில்லையா?

எழுப்பப்பட்ட பிரச்சனை முரசொலி இருக்கும் இடம், பஞ்சமி நிலமா அல்லவா என்பது தானே தவிர, முரசொலி அலுவலகம் அங்கு வாடகைக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல என்று கூறுவதன் மூலம் அரசியல் நேர்மை குறித்த இந்த வினாவை கடந்து சென்று விட முடியுமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜி.கே.மணி.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *