நீதிமன்ற உத்தரவை மீறி ரேஷன் கடைகள் முன் அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் முறையிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, 2.06 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பரிசு தொகையை அரசு வழங்கி வருகிறது. இதனிடையே, பொங்கல் பரிசுக்காக வழங்கப்படும் டோக்கன்களில், அதிமுக தலைவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் படங்களை அச்சிடக்கூடாது என நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் அமர்வில் ஆஜரான திமுக தரப்பு, மூத்த வழக்கறிஞர் வில்சன், நேற்று பிறப்பித்த நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, இதனை மீறி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் ரேஷன் கடைகள் முன்பும், உள்ளேயும் பேனர்கள், போஸ்டர்கள் வைத்து ஆளுங்கட்சி இடையூறு ஏற்படுத்துகிறது என்று முறையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி அளிக்கவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு குறித்து அரசுத்தரப்புக்கு அறிவிக்கை கொடுத்து வழக்கு தாக்கல் செய்ய அனுமதி அளித்தது.
இதையடுத்து, இன்று மாலைக்குள் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் வில்சன், வழக்குத் தொடர்பான நகலை அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் வழங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**�,