முதல்வரின் சிவகங்கை பயணம்: மறைமுகத் தேர்தல் நடைபெறுமா?

politics

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் நடக்கும் தினத்தில் சிவகங்கை செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. இதனால் அதிமுக, திமுக என இரண்டு கூட்டணிகளும் சம பலத்தில் இருந்தன.

கடந்த ஜனவரி 11, 30 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் அதிமுக உறுப்பினர்கள் வராததால் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் தேர்தலை நடத்தக்கோரி திமுக கவுன்சிலர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதனடிப்படையில் வரும் 4ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஆனால், அதே நாளான 4ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். இதனால் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டிலுள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிவகங்கை தேர்தலை திட்டமிட்டப்படி நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “திமுக வெற்றிபெற்று விடும் என்பதால் அதிமுக உறுப்பினர்கள் திட்டமிட்டே தேர்தலைப் புறக்கணித்தனர். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் சிவகங்கை செல்கிறார் என்ற தகவல்கள் வந்துள்ளன. உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடியவரே மாவட்ட ஆட்சியர்தான் என்ற நிலையில், அவரே முதல்வர் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுவிட்டால் தேர்தல் எப்படி நடைபெறும்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “கடந்த மாதம் 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியரே தேர்தலை அறிவித்துவிட்டு, அதே நாளில் அவரே ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஆகவே, திட்டமிட்டபடி 4ஆம் தேதி தேர்தல் நடக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். இதற்கு இன்று பதிலளிப்பதாக ஆணையர் கூறியுள்ளார்” என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

*எழில்*�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *