அரசுக்கு நெருக்கடி -இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை : முதல்வர்!

politics

அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தினால் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் தெரிவித்தார்.

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை, ஊர்காவல் மற்றும் குடிமைப் பாதுகாப்புத் துறை, தடய அறிவியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

தீரச் செயல், தகைசால் பணி, மெச்சத்தக்கப் பணி, சிறந்த நற்பணி, பொதுச்சேவையில் சீர்மிகு பணி, சீர்மிகு புலனாய்வு, சீர்மிகு காவல் பயிற்சி, சிறப்புச் செயலாக்கம், விரல் ரேகை அறிவியலில் சீர்மிகு பணி, தொழில்நுட்பச் சிறப்புப் பணி, தடய அறிவியலில் சீர்மிகு பணி ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விருதை வழங்கி நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “காவல்துறை மக்களோடு நெருக்கமானால்தான், நாட்டில் குற்றங்கள் குறையும். மக்களிடம் இருந்து காவல்துறை விலகி இருந்தால், குற்றம் பெருகும். எனவே, “காவல்துறை நம் நண்பன்” என்று சொல்லத்தக்க விதத்தில் காவலர்கள் செயல்பட வேண்டும். காவல் நிலையங்கள் பொதுமக்களின் மக்கள் தொடர்பு பாதுகாப்பு அலுவலகங்களைப் போலச் செயல்பட வேண்டும். அந்தளவுக்கு அதன் செயல்பாடு அமைய வேண்டும்.

குற்றங்கள் எந்தச் சூழலிலும் நடைபெறாத ஒரு காலத்தை உருவாக்குவதற்கு காவல்துறை திட்டமிட வேண்டும் என்பதுதான் காவல்துறைத் தலைவர் முதல் காவலர்கள் வரைக்கும் நான் வைக்கக்கூடிய கோரிக்கை.

ஒரே ஒரு காவலர் அல்லது ஒரு காவல் நிலையம் தனது கடமையைச் செய்யத் தவறும்போது, அது ஒட்டுமொத்தமாக காவல்துறைக்கே தலைக்குனிவை ஏற்படுத்துகிறது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். எந்த ஒரு காவலராக இருந்தாலும், அவரது செயல் காவல்துறையைத் தலைநிமிர வைக்க வேண்டுமே தவிர, தலைக்குனிவை ஏற்படுத்திவிடக் கூடாது. அத்தகைய எச்சரிக்கை உணர்வு, காவலர்கள் அனைவருக்கும் இருக்குமானால், குற்றச் சம்பவங்களே நடைபெறாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறும்.

எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாகவோ, மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படித் திட்டமிட்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்த நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைப் பொருட்கள் நடமாட்டம் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். கூலிப்படையினர் முழுமையாகத் துடைத்தெறியப்பட வேண்டும். கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இத்தகைய நோக்கங்களைக் கொண்டதாக காவல்துறை கண்டிப்புடன் நடந்தாக வேண்டும். இத்தகைய சூழலை உருவாக்கி, ஒட்டுமொத்தமான அமைதிப் பதக்கத்தைத் தமிழகக் காவல்துறை பெறவேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்தை நோக்கி புதிய புதிய தொழிற்சாலைகள் வருகின்றன என்றால், தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிற காரணத்தால்தான். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என்றால், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால்தான். அத்தகைய அமைதிச் சூழலைக் காக்க வேண்டும். அதற்குக் குந்தகம் ஏற்படுத்தக்கூடிய சிறு சம்பவமும் நடைபெறக் கூடாது.

மக்களைக் காக்கும் கடமை காவலர்களாகிய உங்களுக்கு இருக்கிறது. அதேபோல், காவலர்களாகிய உங்களைக் காக்கக்கூடிய கடமை அரசுக்கும் இருக்கிறது. அதை மனதில் வைத்து ஏராளமான திட்டங்களைக் கடந்த ஓராண்டுக் காலத்தில் தீட்டி இருக்கிறோம்” என்றார்.

மேலும் காவலர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தது உள்ளிட்ட திட்டங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய முதல்வர், வீர தீர செயல் புரிந்த காவல் அதிகாரிகள், காவலர்கள் அல்லது வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் வீரப்பதக்கங்களுக்கான ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள், ஒன்றிய அரசு வழங்கக்கூடிய, குடியரசுத் தலைவர் வீரப் பதக்கத்திற்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை மற்றும் சலுகைகளுக்கு இணையாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *