சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில் கைதான பின்னணி பாடகர் வேல்முருகன் இன்று (மே 13) ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (மே 12) அதிகாலை அந்த பக்கமாக காரில் வந்த வேல்முருகன், ஆற்காடு சாலையில் பணியில் ஈடுபட்டு இருந்த மெட்ரோ பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த பணி நடைபெற்று வருவதாகவும், இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் கூறி அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அங்கிருந்த மெட்ரோ ரயில் திட்ட உதவி மேலாளர் வடிவேலுவைதாக்கி, ஆபாசமாகவும் பேசியுள்ளார் வேல்முருகன். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் வேல்முருகன் மீது வடிவேலு புகாரளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கம் காவல்துறையினர் இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், வேல்முருகன் மீதான புகார் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, அவர் மீது ஆபாசமாக பேசுதல் மற்றும் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.
இன்று, அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர்
ஆடுகளம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் பின்னணி பாடகராக வேல்முருகன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட்: 87.98% தேர்ச்சி!
மீண்டும் மீண்டும் நாகை-இலங்கை கப்பல் சேவை ஒத்திவைப்பு: காரணம் தெரியுமா?