கடிதம் எழுதிய கலெக்டர்: ஆளுங்கட்சியினர் மீது வழக்கு!

Published On:

| By Balaji

�கடலூரில் தேர்தல் அதிகாரியைத் தாக்கிய அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் ஒன்றியத்தில் 14ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் விசிக வேட்பாளர் சுபாஷினி, 21ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விசிக வேட்பாளர் செல்வி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இதை அறிந்த அதிமுக நிர்வாகிகள் கடந்த 19ஆம் தேதி இரவு கடலூர் ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று, விசிக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கக் கூடாது எனக் கூறி தேர்தல் அதிகாரி அருளரசுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் அருளரசுவை இழுத்துத் தள்ளி தாக்குதல் நடத்தவும் முயற்சி செய்தனர். இதைப் பார்த்து அருகிலிருந்தவர்கள் அருளரசுவை, அருகிலுள்ள அறைக்கு அழைத்துச் சென்றனர். அதிமுகவினர் தாக்க முற்படும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிஎஸ்பி சாந்தியைச் சந்தித்து அருளரசு புகார் அளித்தார். இதுபோலவே தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென கடலூர் எஸ்பி அபினவ்வுக்கு, ஆட்சியர் அன்புச்செல்வன் கடிதம் மூலமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியத் தலைவர் பழனிசாமி, வேட்பாளரின் கணவர் சேகர் உள்ளிட்ட 20 பேர் மீது 147, 294 (b), 353, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் கடலூர் புதுநகர் காவல் துறையினர் நேற்று (டிசம்பர் 21) வழக்கு பதிவு செய்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share