கிராம சபை கூட்டத்தை நடத்த தடை: வலுக்கும் எதிர்ப்புகள்!

politics

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக , ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 2020ஆம் ஆண்டுக்கு பிறகு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதுபோன்று கிராம சபை கூட்டத்தை நடத்தக் கோரி மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்,திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 12) தமிழ்நாடு அரசு சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் பிரவீன் நாயர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”கொரோனா சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம். இதுதொடர்பாக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவராக இருந்தபோது கிராம சபை கூட்டத்தை நடத்தக் கோரி போராடிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் கிராம சபை கூட்டம் நடத்தக் கூடாது என்று தடை விதிப்பது ஏன்? என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ட்விட்டரில், “கொரோனாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *