மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக திமுகவில் அதிருப்தி நிலவுகிறதா என்ற கேள்விக்கு திருச்சி சிவா பதிலளித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து 2014ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வானவர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 6 பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக தரப்பிலிருந்து தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரை ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் டெல்லியில் ஒரு தொலைக்காட்சிக்கு மாநிலங்களவை தேர்வு தொடர்பாக திருச்சி சிவா பேட்டியளித்தார்.
“மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளுக்கு ஒரே மாதிரியான அதிகாரங்கள்தான் உள்ளன. ஒரு சட்டம் அவசரமாக உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே மாநிலங்களவை உருவானது. பட்ஜெட் விவகாரத்தில் மட்டும்தான் மாநிலங்களவை உறுப்பினர்கள் கருத்து ஏற்கப்படாது” என்று கூறிய சிவா,
அனைத்து சட்டங்களும் மாநிலங்களவை ஒப்புதல் இல்லாமல் நிறைவேற முடியாது எனவும், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், காவல் துறையில் பணியாற்றியவர்கள், ஆட்சிப் பணி அதிகாரிகள் என அறிவில் சிறந்தவர்களை கட்சிகள் தங்கள் சார்பில் தேர்ந்தெடுத்து மாநிலங்களவைக்கு அனுப்பும் என்றும் தெரிவித்தார்.
திமுகவில் மாநிலங்களவை வேட்பாளர்கள் தேர்வு குறித்து அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறதே என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “யாரோ அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று உங்களைப் போன்றோருக்குத்தான் சொல்லப்படுகிறது. திமுகவில் அதுபோல யாரும் அதிருப்தியாக இல்லை” என்று பதிலளித்தார்.
மேலும், “கோடிக்கணக்கானோர் உறுப்பினராக இருக்கும் கட்சியில் ஆயிரக்கணக்கானோர் தகுதியுள்ளவர்களாக இருப்பர். அதனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழலில் வாய்ப்பு தருவர். தலைமை சிலரை தேர்ந்தெடுக்க பல காரணங்களும், நியாயங்களும் இருக்கும். அதிருப்தியில் இருப்பதாகக் கூறி திமுகவை அசைத்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள். திமுக ஒரு எஃகு கோட்டை. பட்டாணி தோட்டாக்களால் இதனை ஒன்றும் செய்துவிட முடியாது” என்றும் கூறினார் திருச்சி சிவா.
**எழில்**�,