zஇன்று என் கனவு நனவாகியது: புதிய தலைமை நீதிபதி!

politics

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்றதன் மூலம் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவு நிறைவேறியுள்ளதாக புதிய தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னை நீதிமன்ற நீதிபதிகள், ஆன்லைன் வாயிலாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகள்,ஒன்றிய மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

அதில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ் அமல்ராஜ், மற்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் பொறுப்பு தலைமை நீதிபதியை வரவேற்று பேசினர்.

இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, “நேற்று முதல் எனது தமிழ் சகோதர, சகோதரிகள் மூலம் தமிழ் கற்று வருவதாகவும், தற்போதைக்கு ‘வணக்கம்’, ‘நன்றி’, என்ற இரண்டு வார்த்தைகள் மட்டும் கற்றிருப்பதாகவும் கூறினார்.

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சில சுற்றுலா தலங்களுக்கு சென்றபோது, மாநிலத்தின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கண்டு வியந்து, தமிழ்நாட்டில் நான் பிறந்திருக்க வேண்டும் என்று கனவு கண்டேன். இன்று எனது கனவு நனவாகியுள்ளது. தமிழ்நாடு மாநிலம் மற்றும் சட்டத்துறைக்கு சேவை செய்ய இன்று நான் மறுபிறவி எடுத்துள்ளேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,“நானும், சக நீதிபதிகளும் பயமோ, பாரபட்சமோ இன்றி நடுநிலையோடு பணியாற்றுவோம். அப்படி செயல்படும்போது நீதிமன்றம் எனும் கோயில் சிறந்த முறையில் செயல்படும்” என்று உறுதியளித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அதிகம் பேச விரும்பவில்லை. என்னுடைய செயல்களில் நீங்கள் பார்ப்பீர்கள் என்று கூறியவர், “வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் தேரின் இருசக்கரங்கள் போன்று, இருவரும் இணைந்து சென்றால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். அதனால் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை” என்று கூறி உரையை முடித்தார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *