திராவிட மாடல் பிரிவினையைத் தூண்டுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில், அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தினமணி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “திராவிட மாடல்தான் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என்பது போன்ற ஒரு பிம்பத்தை திமுக உருவாக்க முற்படுகிறது. உண்மையில் அது பிரிவினை சிந்தனையைத் தூண்டுகிறது” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 17) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறுபான்மையினர் நல ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
“இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில், பேட்டி அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் ஒருவர், ‘பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல்’ என்று சொல்லி இருக்கிறார். இதைவிடச் சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது.
பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரர்களான அவர்கள், நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது. அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்யும் ஆட்சிதான் திராவிட மாதிரி ஆட்சியாகும்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடாது என்று சொல்லும் அவர்கள் தான் பிரிவினைவாதிகள். இந்த வரிசையில் சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடி அரசாக நமது அரசு உள்ளது.
குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு உரிய வாய்ப்பை வழங்குவதன் மூலமும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமும் சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது” எனக் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பெண் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை : பின்னணி என்ன?
சூறாவளிக்காற்று 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்… கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்
இந்து என்றால் திருடன் என சொன்னது எந்த கும்பல்..