ஒரே இரவு மழை: நீரில் மூழ்கிய பிரதமர் திறந்துவைத்த எக்ஸ்பிரஸ் சாலை!

அரசியல் இந்தியா

ஒரே இரவில் பெய்த மழைக்கு பெங்களூரு-மைசூரு இடையேயான எக்ஸ்பிரஸ் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் இருந்து 145கிமீ தொலைவில் உள்ள மைசூருக்கு பயணிக்க வேண்டுமென்றால் 3 மணி நேரம் தேவைப்படும். இதனால் வாகன ஓட்டிகளின் வசதிக்காக பயண நேரத்தை குறைக்க புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது.

பெங்களூரு-நிடகட்டா-மைசூரு இடையே 118 கி.மீ. தூரத்துக்கு 8,480 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சாலை அமைக்கப்பட்டது. பிரதான சாலை 6 வழியாகவும், மீதமுள்ள 4 வழி அதன் இருபுறமும் தலா 2 வழி என்ற அளவில் சர்வீஸ் சாலையாகவும் அமைக்கப்பட்டது.

இதன்மூலம் 3 மணி நேர பயண நேரமானது 75 நிமிடங்களாக குறையும் என்று கூறப்பட்டது. பெங்களூருவில் இருந்து தமிழகத்தின் குடகு, ஊட்டி, கோவை போன்ற நகரங்களுக்கும் விரைவாக வர முடியும்.

11 மேம்பாலங்கள், 64 சுரங்கவழி பாதைகள், 5 புறவழிச்சாலைகள், 42 சிறிய பாலங்கள் ஆகியவற்றை இந்த எக்ஸ்பிரஸ் சாலை இணைக்கிறது.

இந்த நெடுஞ்சாலையை பிரதமர் மோடி கடந்த மார்ச் 12ஆம் தேதி வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.


சாலை திறந்து இன்னும் ஒரு வாரம் கூட முழுமையாகாத நிலையில், நேற்று ஒரே இரவில் பெய்த மழையால் நீரில் மூழ்கியுள்ளது.

சிறிய மழைக்கு ராம்நகர் அருகே பல இடங்களில் தண்ணீர் தேங்கி விரைவுச் சாலையில் விபத்துகள் ஏற்பட்டன என்று வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “பயணத்தை எளிதாக்குவதற்காக திறக்கப்பட்ட நெடுஞ்சாலை இன்று பொது பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும், சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் நெடுஞ்சாலையாக மாறியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “இந்த நேரத்தில் கர்நாடக முதல்வர் வாய் திறக்கமாட்டார். அரசு கரூவூலத்தில் இருந்து பிரதமர் மோடி இந்த பாலத்தை திறப்பதற்காக கோடிகளில் செலவிடப்பட்டது” என்று விமர்சித்துள்ளார். தேர்தலையொட்டியே சரியாக முடிக்கப்படாமல் அவசர அவசரமாக இந்த சாலை திறக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

புதிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) திட்ட இயக்குனர் பி டி ஸ்ரீதர் கூறுகையில், “நாங்கள் வடிகால்களுக்கு இடத்தை விட்டுதான் சாலை அமைத்தோம். ஆனால் கிராமவாசிகள் வடிகால்களில் சேற்றை கொட்டியதால் வெள்ளம் ஏற்பட்டது. அதை சுத்தம் செய்து சாலை வழக்கம் போல் திறக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இதே பகுதியில் மழை பெய்த போது வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சாலையை பார்வையிட்ட மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, “இந்த சிக்கல் குறித்து தொழில்நுட்ப குழு ஆராய்ந்து வருகிறது. இதுபோன்று மீண்டும் வெள்ளம் ஏற்படாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்”என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா

IND vs AUS 2nd ODI: மைதானத்தின் ரிப்போர்ட் இதோ!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து 3 வழக்குகள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.