பெண் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை : பின்னணி என்ன?

Published On:

| By Kavi

இந்தியா முழுவதும் சிறைகளில் இருக்கும் பெண் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

மேற்கு வங்க மாநில சிறைகளில் காவலில் இருக்கும் பெண் கைதிகள் பலர் கர்ப்பமாக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் வெளியானது.

196 பெண் கைதிகள் கர்ப்பமாகி, அவர்களுக்குக் குழந்தைகளும் பிறந்துள்ளன. இவர்கள் தற்போது குழந்தைகளுடன் மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் கவலைகளை எழுப்பியது. இந்த வழக்கில் மேற்கு வங்க சிறைத்துறை தரப்பில், “சிறைக்குள் 62 குழந்தைகள் மட்டும்தான் பிறந்துள்ளது. இதில் சிறைக்குள் வரும்போது சிலர் கர்ப்பிணியாக இருந்தனர், சிலர் பரோலில் சென்று வரும் போது கர்ப்பிணியாக வந்தவர்கள்” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை உற்றுக் கவனித்த உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
நீதிபதிகள் சஞ்சய்குமார் மற்றும் அஷனுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

கடந்த 9ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறைகளில் பெண்கள் கர்ப்பமாகி, குழந்தைகளை பிரசவிப்பது பற்றி மூத்த வழக்கறிஞர் கவுரவ் அகர்வால் விசாரித்து அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேற்கு வங்கம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டனர்.

இதனால் நாடு முழுவதும் 29 (சிறப்பு) பெண்கள் சிறை, 413 மாவட்ட சிறைகள், 145 மத்திய சிறைகள் என 1,306 சிறைகளில் இருக்கும் பெண் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் (urine gravindex) செய்யப்பட்டு வருகிறது. பெண் கைதிகள் கர்ப்பிணியாக இருக்கிறார்களா? இல்லையா? என்று சோதனைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக சிறைகளில் உள்ள பெண்களுக்கும் மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்று சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் மின்னம்பலம் சார்பாக விசாரித்தோம்.

“தமிழகத்தில் உள்ள சிறைகளில் அப்படி ஒரு மோசமான நிலை இல்லை. ஒரு பெண் கைதியைச் சிறைக்குள் கொண்டுபோகும் முன்பு மருத்துவ பரிசோதனை செய்து அதன் அறிக்கையை நீதிபதியிடம் ஆஜர்படுத்தும்போதே சமர்ப்பிப்போம்.

அந்த விசாரணை கைதி கர்ப்பணியாக இருக்கிறார் என்று அறிந்தாலே பிணையில் அனுப்பிவிடுவார்கள்.
தண்டனை கைதியாக இருந்தால், பெண்கள் சிறைப் பிரிவுக்கு அனுப்பிவிடுவார்கள்.

அந்த பிரிவில் பெண் சிறைக் காவலர் மற்றும் பெண் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அதனால் அப்படி ஒரு விபரீதம் நடக்க இங்கு வாய்ப்புகள் இல்லை, இருந்தாலும் இந்திய அளவில் ஆய்வு செய்ய இருப்பதால், முன்னெச்சரிக்கையாகத் தமிழக சிறைகளில் இருக்கும் பெண் கைதிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யவுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சூறாவளிக்காற்று 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்… கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்

விவசாயி சின்னம் கிடைக்குமா? – நீதிமன்றம் ஏறும் சீமான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share